முருகனை சந்திக்க தடை: சிறைத்துறை நிர்வாக விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் விதிகளை மீறியதால், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களை அவர் சந்திக்க 3 மாதம் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ‘கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தான், இனிமேல் விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, வேலூர் மத்திய சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடைய உள்ளதாக’ சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பிக்கு முருகன் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதற்கு அவரது மனைவி நளினி உள்ளிட்ட உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறி, கடந்த 18-ம் தேதி சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். நேற்று 3-வது நாளாக அவர் தனது உண்ணா விரதத்தைத் தொடர்ந்தார்.

இதுகுறித்து வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் “உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நாங்கள் தொடர்ந்து முருகனிடம் பேசி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கையை அவர் நிராகரித்ததால், சிறைத் துறை விதிமுறைகளை அவர் மீறியதாக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. எனவே, 19ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு அவரை, மனைவி உள்ளிட்ட உறவினர்கள் யாரும் சந்திக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் தினமும் பல மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது உடல்நிலையை சிறைக் காவலர்கள் மற்றும் சிறைத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்