தற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு இனவிகிதாசாரம் பற்றிப் பேசக் கூடாது.

– இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது-

நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு – முன் அமைதிச் சூழல் ஏற்பட்ட காலத்தில் இருந்த விகிதாசாரங்களை வைத்தே பேச வேண்டியது உசிதம் என நான் விரும்புகின்றேன்.

1983ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரமானது தமிழர்கள்-42 சதவீதம் முஸலீம்கள-32 சதவீதம் சிங்களவர்கள்-26 சதவீதமாக இருந்துள்ளது.

நாட்டில் எற்பட்ட போரின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களும் நாட்டுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது எனவே தற்போதய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்களைப் பேசக் கூடாது

இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கக் கூடும் காரணம் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கூட்டரசின் அரைவாசி காலம் இவ்வாண்டுடன் முடிவடையவுள்ளது.

ஆகவே அபிவிருத்திப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டிய தருவாயிலும் நாம் உள்ளோம் என்றார்.

மாவட்டச் செயலர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுகந்த புஞ்சி நிலமே நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகருப் இ இம்ரான் மகருப், எம்.எஸ்.தௌபிக் க.துரைரெட்ணசிங்கம் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்