வல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்!

பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் என்பதை ஏற்றுக் கொண்டே அவர் வீடு சென்று சந்தித்துள்ளார்.

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும், உபகுழுக்களின் தலைவர் பதவியினை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவசரமாக சம்பந்தன் மஹிந்தவைச் சந்தித்தார் என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

வல்லரசு நாடுகள் தமக்கு எச்சரிக்கை செய்துள்ள நிலையில்தான் தமது பிழையினைத் திருத்தி தமிழ் மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அவசரமான ஒரு அறிக்கையினை கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தேடிச் சென்று சந்தித்து நிபந்தனைகளை முன்வைக்க, மஹிந்தவைப் பிரதமராக தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே சந்தித்தோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் அறிக்கை விடுவது நாடகத்தின் ஒரு பகுதியே ஆகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்