ஹாட்லியின் மைந்தர்களது 19 ஆவது நினைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது!

யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டின் உயர்தர வகுப்பு மாணவர்களாக கல்வி செயற்பாடுகளை தொடர்ந்து வந்த வேளை கடல் அனர்த்தத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும் அதே வகுப்பைச் சேர்ந்தவரும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்த வேளை விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு மாணவன் உள்ளிட்ட ஐவரின் நினைவை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வு மற்றும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடந்த 17/11/1999 அன்று கடலோடு கடலாக சங்கமித்திருந்த, பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகியோருடன் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்த பொழுதில் புகையிரத விபத்தில் சாவடைந்திருந்த மரியரட்ணம்-குணரட்ணம் ஆகியோரின் நினைவாக இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவர்களுடன் சமகாலத்தில் கல்விபயிhன்ற நண்பர்கள் ஒன்றிணைந்து பத்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு யாழ்.ஹாட்லி கல்லூரியின் அதிபர் திரு. த.முகுந்தன் அவர்கள் தலைமையில் 16/11/2018 அன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் மாணவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி மாலை அணிவித்தைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியத்தின் ஏற்பாட்டில் ஹாட்லி கல்லூரியில் கல்வி பயின்றுவரும் உயர்தர வகுப்பு மாணவர்களில் பொருளாதார ரீதியில் பிந்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பத்து மாணவர்களை தெரிவு செய்து அவர்களது கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பணத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் தெரிவுசெய்யப்படும் பத்து மாணவர்களுக்கு உதவுதொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், யாழ்.ஹாட்லி கல்லூரி ரீதியில் பிரத்தியேகமாக நடாத்தப்பட்டிருந்த பொது அறிவு போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய 28 மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. ஹாட்லி கல்லூரி மற்றும் சகோதர பாடசாலைகளாக விளங்கிவரும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கும் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறு தொகை அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியினர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடமாடும் குருதிக்கொடை முகாம் ஹாட்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்குருதிக் கொடை முகாமில் ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 47 பேர் இரத்த தானம் செய்துள்ளார்கள்.

உயிரிழந்த மாணவர்களது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஹாட்லி கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.

ஹாட்லியின் மைந்தர்களது 19 அவது ஆண்டை முன்னிட்டு அவர்கள் உயிரிழந்திருந்த இன்பர்சிட்டி கடற்கரையில் நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் புகைப்படங்கள் தாயகத்தில் இருந்து இரா.மயூதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்