அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பு –சிவாஜி கோரிக்கை!

சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரிற்கும் இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.அவர்களது உயிரோடு விளையாடும் இலங்கை அரசின் நடவடிக்கைகளிற்கெதிராக வடமாகாணசபையினில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை அவர் நடத்திய அவசர பத்தரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் சமாதான சூழல் ஒன்று ஏற்பட்ட பின்னர் பொதுமன்னிப்பு வழங்குவது உலக அளவினில் நடைபெறுவதொன்றே.1987 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அனைத்து அமைப்பின் உறுப்பினர்களிற்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அதே போன்று 2009 யுத்த முடிவின் பின்னராக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக சொல்லி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இப்போது தளபதிகள் உள்ளிட்ட பலர் வெளியே இருக்கின்றனர்.ஆனால் அவர்களிற்கு சாப்பாடு கொடுத்தவர்கள்,தண்ணீர் கொடுத்தவர்களென பலர் வருடக்கணக்கினில் சிறைகளினிலிருக்கிறார்கள்.அவர்களில் பலர் பத்துவருடங்களிற்கு மேல் சிறைகளினிலிருந்த பின்னர் குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பலர் பொய்யான குற்றச்சாட்டுக்களினால் 50 வருடம்,100 வருடமென சிறைத்தண்டனை பெற்றுமுள்ளனர்.17 வயதினில் கைதான சிறுவன் ஒருவன் 20 வருடங்கள் கடந்தும் சிறையிலுள்ளான்.
நல்லாட்சியென சொல்லிக்கொள்ளும் அரசு ஆகக்குறைந்தது நல்லிணக்கத்தை வெளிப்படுத்த சிறைகளினில் இருக்கும் வெறும் 200 இற்கும் குறைந்த அரசியல் கைதிகளிற்காவது பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணசபை அமர்வின் போது அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களதும் ஆதரவுடன் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்