143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட நினைவுத்தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகிழடித்தீவு இறால்பண்ணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 143 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தமாக மகிழடித்தீவு சந்தியில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டு அதில் உயிழந்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நினைவுத்தூபி 2007ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட பின்னர் அவ்வாறே காட்சியளித்தது.

தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் முயற்சியினால் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்தின், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்