முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்க்கையை சீர்குழைக்க வேண்டாம் – அனந்தி!

வவுணதீவு சம்பவத்தில் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதானது அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குழைக்கும் வகையில் இருப்பதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து முன்னாள் போராளிகளை அச்சமூட்டுவது மட்டுமன்றி வடக்கில் உள்ள மக்களும் அச்சத்துடன் வாழும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது.

யுத்தம் நடைபெற்று யுத்த அழிவில் இருந்து மீண்டெழுந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களின் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் படைத் தளபதியின் கருத்து அமைந்துள்ளது.

படைத்தளபதி இவ்வாறு அச்சமூட்டும் கருத்தை தவிர்த்திருக்க வேண்டும். தமது இராணுவத்தின் நிலை மற்றும் இராணுவத்தின் கடமைகளை ஆற்றட்டும். ஆனால், சமூக மயப்படுத்தப்பட்டிருந்த போராளிகளை அச்சமூட்டும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதென்பது, மிகவும் வருத்தத்திற்குரியது.

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எடுத்தவுடனே, முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து கூறுகின்ற கருத்தானது, ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழர்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தும் கருத்தாக பார்க்கின்றோம்.

மக்களை அச்சத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சிவில் நிர்வாகத்தில் பொலிஸார் இருக்கின்றார்கள். சிவில் கட்டமைப்பு சரியான இருக்கும் பட்சத்தில் இராணுவம், முதன்மையாக தமது கருத்துக்களை கூறுவதும், மக்களை தமது பிடிக்குள் வைத்திருக்க கூறும் கருத்துக்களையும் ஏற்க முடியாது“ என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்