வடமராட்சி கிழக்கிலும் வெள்ளத்தால் பாதிப்பு, உதவிகள் இல்லாமல் அவலம்

கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் வடமராட்சி கிழக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, உடுத்துறை, கொடுக்கிளாய், தாளையடி போன்ற பிரதேசங்களே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

தொடரும் மழையால் அந்தப்பகுதிகளில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த மக்கள் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு எதுவிதமான உதவிகளும் வழங்கப் படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

வெள்ள இடரினால் கொக்கிளாய் – இயக்கச்சி வீதிக்கு குறுக்காக இரணைமடுகுளத்து நீர் பாய்ந்து வருவதால் அந்த வீதியூடான போக்கு வரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன. அத்துடன் கட்டைக்காட்டில் இருந்து தாளையடிக்கான கரையோரப் பிரதான வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதிலும் போக்கு வரத்தை மேற்கொளவதிலும் பெரும் இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறு பல வழிகளிலும் அந்த மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த கால்களில் இடம்பெற்ற வானிலை சீரின்மை காரணமாக கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பல நாள்களாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை. மேலும் வெள்ளம் காரணமாக விவசாயம் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமக்கான எந்தவித உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்