உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலை!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

2009ஆம் அண்டு காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், இடைக்காடு விக்டர் முதலாம் முகாமில் வைத்து 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவத்தினருக்கு மரணத்தினை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த 3 அரசியல் கைதிகளும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 2013ஆம் ஆண்டு ஜீன் மாதம் 25ஆம் திகதி மதியரசன் சுலக்சன் மற்றும் கணேசன் தர்சனுக்கும், 2017ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 12ஆம் திகதி முதலாம் பிரதிவாதியான இராசதுரை திருவருளினையும் இவ் வழக்கில் இணைத்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கினை நடத்துவதற்கு சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரை நியமித்திருப்பதாகவும் இந்த வழக்கின் சாட்சி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இந்த வழக்கினை வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான தவணை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த மூவரும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என அரச சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் பிரதிவாதிகள் குறிப்பிடுகையில்,

இந்த வழக்கானது கடந்த 4 வருடங்களாக இந்த நீதிமன்றத்திலேயே தவணை வழங்கப்பட்டு வருகின்றது. நாங்கள் 8 வருடங்களும் 3 மாதங்களுமாக விளக்கமறியலில் இருந்து வருகின்றோம்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இதுவரை காலமும் முன்னெடுக்கப்படாத நிலையில் நாங்கள் மூவரும் கடந்த 20ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

குறித்த வழக்கின் விசாரணைகளானது இந்த நீதிமன்றத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தனர்.

இதன்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், இந்த வழக்கானது கடந்த 4 வருடங்களாக இந் நீதிமன்றத்திலேயே நடந்து வருகின்றது.

பிரதிவாதிகள் கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றனர். தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த எதிரிகள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு அவர்களது உயிருக்கு ஏதும் ஏற்பட்டால் அது தொடர்பில் நான் பொறுப்புக்கூற வேண்டியவனாக உள்ளேன் என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடைக்கட்டளை சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்திற்கு எடுத்து முடிவுறுத்துமாறு பிரதம நீதியரசரினால் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதாகவும், அனைத்து சாட்சிகளுக்கும் அழைப்பு கட்டளை பிறப்பித்துள்ளதுடன் வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25, 26, 27ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்