முன்னாள் போராளிகளின் இன்றைய நிலைக்கு கருணாவே காரணம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு!

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று முன்னாள் போராளிகள் இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கருணாதான் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளை மையப்படுத்தி 3 மாத காலத்திற்குள் ஒன்றியத்தை உருவாக்கி இருக்கின்றோம். அம்பாறை மாவட்டத்திற்கு முதன் முறையாக வருகைதந்து முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களை சந்தித்திருக்கின்றோம்.

எமது மக்கள், போராளிகள் படும் துன்ப துயரங்களை எமது ஒன்றியம் மூலம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி வாழ்வாதாரத்தினை பெறுவதற்காக உழைத்து வருகின்றோம்.

எமது இனத்திற்கு துரோகம் செய்ய ஒரு காலமும் நினைக்கக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. மாவீரர் என்று கூறுபவர்கள் விலைமதிக்க முடியாத சொத்துக்கள். உலகத்திற்கே தமிழர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதனை காட்டியவர் எமது தலைவர்.

கருணா திருகோணமலையில் வைத்து கூறுகின்றார், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு திரும்பவும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று. இவர் கூறுவது வேதனையான விடயம். இதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வந்தோம். அவ்வாறென்றால் கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவு மக்களை அழித்தவர். இன்று முன்னாள் போராளிகள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கருணாதான் என்று இன்பராசா குற்றம்சாட்டினார்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்