தமிழக அரசை நம்பமுடியாது – பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விரக்தி

மகன் வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த உத்தரவை நம்ப முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.

பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், டிவி சேனல் ஒன்றிடம் அற்புதம்மாள் பேசுகையில், நீங்கள் சொல்லிதான் இந்த விஷயம் எனக்கு தெரியும். எனக்கு வேறு எந்த தகவலும் வரவில்லை.

வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த தகவலை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை பேரறிவாளனை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர் விடுதலை செய்யப்படவில்லை. இப்போது பரோலில் வெளியிடுவது குறித்த தகவலையும் எப்படி நம்புவது என்று தெரியவில்லை.

நீண்டகாலமாக பேரறிவாளனை வெளியே கொண்டுவர முயன்று வருகிறேன். எனது மகன் வாழ்க்கை காலமெல்லாம் சிறையிலேயே கழிந்துவிட்டது. எனவேதான் நான் விரக்தியில் நம்ப முடியாமல் பேசுகிறேன். என்னை யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். ஒருவேளை, இத்தகவல் உண்மையெனில், பரோலில் வெளியேவர ஏற்பாடு செய்த அனைவருக்குமே நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வாறு கூறிய அற்புதம்மாள், தேம்பி அழ ஆரம்பித்தார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில், பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பேரறிவாளன் மத்திய அரசு விசாரணை அமைப்பால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி என்பதால் இந்த தீர்மானத்தை வைத்து அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்