வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், இந்தியப் பிரதமர் மோடிக்கு நேற்று வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், “இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

எதிர்வரும் ஆண்டுகளில் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல மைல் கற்களை நீங்களும் இந்திய மக்களும் அடைய நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

இத்தருணத்தில் இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு, தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

தொடர்ந்தும் வருங்காலங்களில், இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான, நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான, ஒரு நிரந்தர தீர்வை எட்டும் முகமாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும், உறுதித்தன்மையையும் நிலைநாட்டும் முகமாகவும் மிகநெருங்கி செயலாற்ற ஆவலாக உள்ளோம்.

மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களின் சார்பில், உயரிய பதவியில் நீங்கள் திறம்பட செயலாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்