அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதிபர் தேர்தல் குறித்த இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். யாருக்கு ஆதரவளிப்பது என்று விரைவில் அறிவிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் உள்ள வேறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரனும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர்.

எனினும், கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையை விட, சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில், கூடுதல் சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் சுமந்திரனும் கூறியுள்ளனர்.

அதேவேளை, தமிழ் அரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடந்த உள்ளூராட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒருமனதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று, வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, இதன் பின்னர், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும், நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்