தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது.

சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி பதவியேற்பின் போதே தெரிந்த ஒன்றாக இருக்கையில் அது குறித்து சரியான நிலைப்பாடெடுக்காது இனியொன்றும் செய்யமுடியாதென்ற இக்கட்டு நிலைவரை இருந்துவிட்டு ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கோத்தபாயவை காட்டி சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தேர்தலை புறக்கணிக்குமாறு கோருகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
சிந்தித்து வாக்களிக்குமாறு சொல்கிறது தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.
தமிழ் பொது வேட்பாளருக்கு(?) வாக்களியுங்கள் என்று சிவாஜிலிங்கம், ரெலோ சிறிகாந்தா அணி, அனந்தி சசிதரன் ஆகிய தரப்பு வற்புறுத்தல்.

மேற்கண்ட நான்கு முடிவுகளும் தமிழ் மக்களை நோக்கியே விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரவர் தரப்பில் நியாயங்கள்(?) கூறப்பட்டுவருவது ஒருபக்கமிருக்கட்டும். இதனால் மக்கள் குழம்பிப்போயுள்ளார்கள் என்பதைவிட, தமிழ் மக்களை தமிழ்த்தேசியத்தில் இருந்து நீக்கம் செய்து சிங்கள தேசியத்திற்குள் கரைத்துவிடும் எத்தனமாகவே அமைந்துள்ளது. இந்த பேராபத்தை யாரும் உணராதவர்களாக இவ்வாறு பிளவுபட்டு நின்று ஆளுக்கொரு நிலைப்பாட்டில் இருப்பதாக நாம் கருதுவோமாயின் நாமே ஏமாளிகள்.

என்ன செய்திருக்க வேண்டும் தமிழர் தலைமைகள்?

ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்ட அரசியலமைப்பின் பிரகாரம் சர்வ அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சிறிலங்கா சனாதிபதியாக யார் வந்தாலும் தமிழர்களுக்கு நீதியான நியாயமான தீர்வை ஒருபோதும் வழங்கப்போவதில்லை, வழங்கவும் முடியாது என்பதே வரலாறு கூறிநிற்கும் பேருண்மையாகும்.

அவ்வாறான புறநிலையில்தான், தமிழர்கள் எவ்வாறு அதனை தமக்கானதாக மாற்றுவது என்பதற்கே தீர்க்கமான தலைமையின் இருப்பும், தேவையும் அவசியமாகின்றது. உண்மையில் தமிழ் மக்களின் நலனிலும் இருப்பிலும் அக்கறைகொண்ட தலைமைகளாக மேற்சொன்ன தமிழ்த் தலைமைகள் இருந்திருப்பின் இவ்வாறு தனிப்பட்ட சுயநல காரணங்களை முன்னிறுத்தி பிளவுபட்டு நின்று பெரும் பாதகத்தை ஏற்படுத்தியிருக்கமாட்டார்கள்.

ஆகவே தமிழர்களுக்கு நேரடியான அனுகூலமற்ற இத்தேர்தலைக்கூட சாதகமாக மாற்றுவதற்கு உரிய வழிவகைகள் குறித்து யாரும் சிந்திக்கவும் இல்லை. வழிகாட்டவும் இல்லை. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய கொள்கைப்பிரகடனத்தின் அடிப்படையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை அனைவரும் ஒன்றுபட்டு நிறுத்தியிருந்தால் வரலாற்றையே மாற்றியெழுதியிருக்க முடியும். அதற்காக, யாருக்கும் சொல்லாது, யாருடனும் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்காது தம்மூப்பில் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திவிட்டு தம்மைத்தாமே தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக பிரகடனப்படுத்தியிருப்பது போன்றதல்ல நிலமை.

முன்னரே குறிப்பிட்டது போன்று சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடக்கும் என்பது தெரிந்த நிலையில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு முன்னராவது தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போகின்றோம் என்பதை வெளிப்படுத்தி அதனை நோக்கியதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பின், இந்துசமுத்திர பிராந்தியம் கடந்து இந்தோ-பசுபிக் பிராந்தியமாக விரிவாக்கம் பெற்றுள்ள பூகோள அரசியலை தீர்மானிக்கும் தரப்பாக தமிழர் தரப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பது திண்ணம்.

சிறிலங்காவின் ஆட்சி-அதிகாரத்தில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை பிராந்திய-உலக வல்லாதிக்க சக்திகளே தீர்மானிக்கும் நிலை, 2009 மே-18 இற்கு பின்னர் வலுப்பெற்றுள்ளது. 2015 ஆட்சி மாற்றம் அதனையே மெய்ப்பித்து நிற்கின்றது. அதுமட்டுமல்லாது சிறிலங்காவின் தலையெழுத்தையும் அதனோடிணைந்த பிராந்திய-உலக வல்லாதிக்க சக்திகளின் நலன்களையும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்களே இருக்கின்றார்கள் என்பதும் அழுத்தம் திருத்தமாக நிருபனமாகியிருந்தது.

அந்தவகையில் பிராந்திய-உலக வல்லாதிக்க சக்திகளுக்கு ஏதுவான சிங்கள வேட்பாளரின் வெற்றியை கேள்விக்குள்ளாக்கும் வகையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படப்போகின்றார், நிறுத்தப்பட்டுவிட்டார் என்பதான சூழமைவை நாம் ஏற்படுத்தியிருந்தால் நிலமை இவ்வாறு இருந்திருக்கும். தமது நலன்களுக்கு ஏதுவானவரை சிறிலங்கா சனாதிபதி அரியணையில் ஏற்றி அழகுபார்க்க விரும்பும் பிராந்திய-உலக வல்லாதிக்க சக்திகள் தமிழ்த் தலைமைகளிடம் ஓடோடி வந்திருக்கும். ஏதேதோ சொல்லி தமிழ் பொது வேட்பாளரை போட்டியில் இருந்து விலத்துமாறு வலியுறுத்தியிருப்பார்கள். அவ்வாறான நிலையில் சர்வதேச நாடு ஒன்றின் முன்னிலையில் எழுத்துமூல உடன்பாடு ஒன்றை தமிழர்தரப்பு மேற்கொள்வதற்கான அருமையான சூழல், பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று ஏற்பட்டிருக்கும்.

இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல என்பதை 2015 சனாதிபதித்தேர்தல் உறுதிசெய்கின்றது. அப்போது முழுமையாக, இணக்க அரசியலின் பெயரால் அடிபணிவு அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியதன் மூலமாக கைநழுவிப்போன வாய்ப்பு இம்முறையும் தமிழர்களுக்கு கைக்கெட்டும் தூரம்வரை அணுக்கமாக வந்து மீண்டும் தமிழ் மக்களின் நலனிலும், இருப்பிலும் அக்கறையற்ற தலைமைகளின் கையாலாகத்தனத்தால் நழுவிவிட்டது.

சிங்கள பௌத்த பூச்சாண்டி நொண்டிச்சாச்டாகும்!

தமிழர்களுக்கு வாக்குறுதிகளை பேச்சிலோ, எழுத்திலோ கொடுக்கும் வேட்பாளரை சிங்கள பௌத்த மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என்ற பூச்சாண்டி காட்டுபவர்கள், அவ்வாறான கடும்போக்குவாத சிங்கள பௌத்த மக்களை தவிர்த்து எவ்வாறு தீர்வை பெற்றுத்தரப்போகின்றார்கள் என்று கூறமுடியுமா? அல்லது வெற்றியை பெற்ற பின்னர் அவ்வாறான கடும்போக்குவாத சிங்கள பௌத்த மக்களை நாடுகடத்திவிட்டுத்தான் தீர்வை பெற்றுத்தரப்போகின்றார்களா?

கடும்போக்குவாத சிங்கள பௌத்த மக்களின் விருப்பு, வெறுப்பு அவர்களுக்கானதாகவே இருந்துவிட்டுப்போகட்டும். அதற்காக நாம் எமது நியாயமான கோரிக்கைகளை கைவிட்டுவிடவோ, நீதி-நியாயத்திற்கான முன்னெடுப்புகளை மறந்துவிடவோ முடியாது. சிங்கள ஆட்சியாளர்கள் தம்போக்கில் எமக்கான உரிமைகளை ஒருபோதும் தரப்போவதுமில்லை, நீதி-நியாயங்களை வழங்கப்போவதுமில்லை. அனைத்துலக அழுத்தத்தின் மூலமே அதனை நாம் அடைய முடியும். நாமாக தேடிச்சென்றால் எதுவும் நடக்கப்போவதில்லை. தீர்வை அடைவதற்கான ஏதுநிலையை உருவாக்கவல்ல பிராந்திய-உலக வல்லாதிக்க சக்திகள் எம்மை நோக்கி வருவது ஐந்தாண்டுகளுக்கொரு முறைதான். அதனை கச்சிதமாக பயன்படுத்த எமது அரசியல் தலைமைகள் தவறிவிட்டன. இந்நிலையானது, இந்தோ-பசிபிக் என பரந்து விரிவாக்கமடைந்துள்ள பூகோள அரசியலின் ‘கள’நாயகர்களாக இருந்திருக்க வேண்டிய தமிழர்களை வேடிக்கையாளர்களாக்கியுள்ளது.

சுயேட்சை-பொது வேட்பாளரை தமிழர்கள் தேசமாக திரண்டு ஆதரவளிக்க முடியாதது ஏன்?

இவ்வளவுதூரம் தமிழ் பொது வேட்பாளர் குறித்து கூறும்போது ஏன் சிவாஜிலிங்கம் அவர்களை ஆதரிக்கக்கூடாது என்ற கேள்வி இயல்பாகவே எழும். தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் செயற்பட்டுவரும் தரப்புகள் ஒன்றுபடாது ஆளுக்கொரு திசையில் நிற்பதும், சிங்கள தேசியக் கட்சிகளின் வட-கிழக்கு பிரதிநிதிகள், ஆதரவு கட்சிகள் அவரவரர் திசையில் நிற்பதும் தமிழர்களின் வாக்குகள் சிதறிப்போகும் நிலையை தோற்றுவித்துள்ளது. இச்சவாலை எதிர்கொண்டு தமிழர்களின் வாக்குகளை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு கிடைக்கச்செய்வதற்கு கால அவகாசம் போதாது என்பதே உண்மை.

போனால் போகுதென தமிழர்கள் தேசமாக ஒன்றுசேர்ந்து சிவாஜிலிங்கம் அவர்களை ஆதரிப்பதான தோற்றத்தை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. சரியான தயார்ப்படுத்தல் இன்றி, சகல தரப்புகளின் ஆதரவின்றிய நிலையில் தேசமாக முனைப்பு காட்டுவது பாதகமாகவே அமைந்துவிடும். சிவாஜிலிங்கம் அவர்கள் முன்வைத்து நிற்கும் தமிழர்களது கோரிக்கைகள் நியாயமானவை. எக்காரணம் கொண்டும் அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அவை மலினப்படுத்தப்பட்டுவிடக்கூடாதென்பதே தேசமாக அவரை ஆதரிக்க முடியாமைக்கு காரணமாகும்.

ஆனால், இவையெல்லாவற்றையும் மீறி சிவாஜிலிங்கம் அவர்களுக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளதன் விளைவே சம்பந்தனின் கெஞ்சலும் அதனைத்தொடர்ந்த நேரடி சந்திப்பிற்கான முனைப்புகளும். ஆயிரம் வாக்குகளைக் கூட பெறமாட்டார் என்று நக்கலடித்தவர்கள் கூட காரியத்தை கெடுத்துவிடாது விலகுமாறு கெஞ்சுமளவிற்கு நிலமையில் முன்னேற்றமிருப்பதை அவதானிக்க முடிகிறது. விலைபோயும், வெற்றி-தோல்வி குறித்த கலக்கத்திலும் தமிழர்களுக்கான தீர்வை நோக்கிய அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்ட அனைவருக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனக்கருதும் பலரது தெரிவாக சிவாஜிலிங்கம் அவர்களே இருக்கின்றார். இவ்வாறு தன்னாலே கிடைக்கும் வாக்குகள் தமிழர் தலைமைகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு சவுக்கடியாக இருக்குமென்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சிவாஜிலிங்கம், சஜித் பிரேமதாச, கோத்தபாய ராசபக்சே ஆகிய மூவருக்கும் கிடைக்கும் வாக்குகள், தேசிய ரீதியில் சஜித்-கோத்தா ஆகியோருக்கு கிடைக்கும் வாக்குகளுக்கு இணையாக எல்லோராலும் உற்றுநோக்கப்படும் நிலையில் தமிழர்கள் தேசமாக சிவாஜிலிங்கம் அவர்களை முன்னிறுத்துவதில் பெரும் பாதகமாகவே அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்!

2015 ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதையுமே செய்யாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இன்று சஜித்துக்காக வாக்கு கேட்கின்றனர். நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் மைத்திரி என முட்டுச்சந்தில் வந்து நின்று கூப்பாடுபோட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே உருப்படியாக தமிழர்களுக்கு கிடைக்காமைக்கு ரணில்-மைத்திரி-சந்திரிக்கா கூட்டரசுக்கு இணையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான அணுகுமுறையும் காரணமாகும்.

உருவாகிய கூட்டரசில் ஆட்சி-அதிகாரத்தை அலங்கரித்த ரணில்-மைத்திரி ஆகிய இருவரையும் லாவகமாக கையாண்டு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முயற்சிகளை மேற்கொள்ளும் இடத்தில் இருந்த கூட்டமைப்பு தலைமைகள் ரணில் தரப்போடு மட்டும் நெருக்கமாக இருந்தமையே இந்நிலைக்கு காரணமாகும். அத்தவறினால் அவர்களுக்கு இலாபமேயன்றி நட்டமேதுமில்லை. இழப்புகள் என்னவோ தமிழர்களுக்கே.

ஆசை காட்டி மோசம் செய்யும் மேற்குலகம்!

எட்டாவது சனாதிபதியின் வெற்றியில் தமிழ் மக்களின் வாக்குகள் இருந்தாலே பொறுப்புக்கூறலுக்கு அவரை நிர்ப்பந்திக்க முடியும் என கதைவிடும் மேற்குலக தரப்பு தமிழ் மக்களின் வாக்குகளால் சனாதிபதியான மைத்திரியிடம் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுத்தந்ததை கூறமுடியுமா?

தேர்தல் புறக்கணிப்பு அரசியல்!

தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க கோருவதானது தாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என்பதைக்காட்டுவதற்கு வேண்டுமானால் பயன்படுமேயன்றி தமிழர்களுக்கு எந்த பயனுமில்லை.

சிங்கள தேசியத்திற்குள் தமிழர்கள் கரைந்துபோவதற்கு தமிழ்த் தலைமைகளே பொறுப்பு!

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எமது மக்களுக்கு சரியான திசைவழியை தமிழ் அரசியல் தலைமைகள் காட்டத்தவறியுள்ளன. இதன் காரணமாக எவ்வாறு தாமகவே முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனரோ அவ்வாறே தமது தலைவிதியையும் தீர்மானிக்கும் கையறுநிலைக்கு தாயகத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த சனாதிபதித் தேர்தலானது தமிழர்களுக்கானதாக இல்லாதிருந்தாலும் இதன் காரணமாக தமிழர்களின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் தேர்தலாக அமையப்போகின்றது.

இத்தேர்தலில் கூட தமிழ் மக்களுக்கு சரியான திசைவழியை தமிழ்த் தலைமைகள் காட்டாத நிலையில் பெரும்பாலானவர்கள் சிங்கள தேசியக்கட்சியின் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வைக்கப்படப்போகின்றார்கள். இதோடு இந்நிலை நின்றுவிடாது வரும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் போதும் இதே சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னே தமிழர்களது வாக்குகள் கரைந்தோடப்போகின்றது. இப்பவே சிங்கள தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்துவதில் தமிழர்கள் பெருமைகொள்கிறார்கள் எனில், பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல்களின் போது கற்பனைசெய்து பார்க்கமுடியாத காட்சிகள் அரங்கேறும். அதற்கான முழுப்பொறுப்பையும் இதே தமிழ்த் தலைமைகளே ஏற்கவேண்டும்.

சர்வதேசத்திற்கு சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு சர்வதேசமும் வழங்கிய ‘தீர்வுத்திட்ட’ உத்தரவாதம் காற்றில் பறக்கவிடப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் இதே தரப்புகள் ஏமாறவும், ஏமாற்றவும் தயாராகவே உள்ளனர். அவர்களுடன் எமது தலைவர்களும், ஏமாந்து போவதிலும், ஏமாற்றுவதிலும் உடன்கட்டையேற முற்படுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?’ எனும் வாசகமே இனிவரும் காலங்களை இட்டுநிரப்பப்போகின்றது என்பதே நிதர்சனமாம உண்மையாகும்.

இரா.மயூதரன்.

13/11/2019

About இலக்கியன்

மறுமொழி இடவும்