சாமியாருக்கு எதிராக தீர்ப்பு: ஆதரவாளர்கள் வன்முறை – 28 பேர் உயிரிழப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானதும் பஞ்ச்குலா நீதிமன்றம் பகுதியில் திரண்டிருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறயில் குதித்தனர். அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அருகாமையில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரு ரெயில் நிலையங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் தீயிட்டு எரிக்கப்பட்டன.

பஞ்சாப்பில் உள்ள மன்சா நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கிருந்த கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

டெல்லியிலும் கலவரம் வெடிக்காமல் இருக்க டெல்லி மற்றும் டெல்லியின் பிறபகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், மாலை ஐந்து மணியளவில் அரியானா – டெல்லி எல்லைப்பகுதியிலும் வன்முறை வெடித்தது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள லோனி சவுக் பகுதியில் ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனை வழியாக வந்த பஸ்சை வழிமறித்த கும்பல் பயணிகளை விரட்டி அடித்துவிட்டு பஸ்சை தீயிட்டு எரித்தது. ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் அருகே காலியாக நின்ற ரேவா எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரு பெட்டிகள் எரிக்கப்பட்டது. இதேபோல் நந்த் நகரி பகுதியிலும் 2 பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன .

வன்முறையை கைவிட்டு அமைதி ஏற்பட உதவிட வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லியில் இருந்து அரியானா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அரியானா மற்றும் பஞ்சாப் மாநில ஐகோர்ட் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியானா முதல் மந்திரி கத்தார் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று மாலை 7 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகவும், 250-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்