ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு வழங்கப்பட்டமை தவறு என்றும் அந்த ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். என்றும் பகீரங்கமாகக் கூறியுள்ளார்.


இந்திய தனது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அயல் நாடுகளில் வெளிசக்திகள் – குறிப்பாக வல்லரசுகள் காலூன்றுவதனைத் தனது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே கருதி வருகின்றது.
அந்த வகையில் கோட்டாபய ராஜபக்சவினுடைய அண்ணன் மகிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கம் நடந்து கொண்ட விதம் தொடர்பில் இந்தியாவுக்கு பாரிய அதிருப்தி இருந்ததை எல்லோரும் அறிவார்கள். இதன் காரணமாhகவே மகிந்தராஜபக்சேவின் ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்தியா மிகத்தீவிரமாக வேலை செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
காரணம் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவிடமிருந்து பாரியளவு கடன்களைப் பெற்றதன் மூலம் இலங்கையை சீனாவுக்கு முழுமையாக பொருளாதார ரீதியாக விற்பனை செய்தது போன்ற அல்லது மீள முடியாதளவுக்கு அடகுவைத்துள்ள நிலையை உருவாக்கியுள்ளது.

சிறீலங்காவின் பொருளாதாரம் முழுமையாக சீனாவின் கைகளுக்கு மாறுமளவுக்கு திட்மிட்டு நிலைமைகள் மாற்றப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து பெருமளவு கடன்கள் பெறப்பட்டும் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மூலமும் அந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


இப் பின்னணியிலேயே மகிந்த ராஜபக்சவினுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டு மைத்திரிபால சிறீசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு மைத்திரிபாலசிறீசேன – ரணில் ஆட்சி ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இவர்களும் தமது தேர்தல் பிரசாரங்களின் போது சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கியிருந்தனர். குறிப்பாக துறைமுகநகர உடன்படிக்கை, அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை போன்றவற்றை இரத்துச் செய்யப்போவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்தனர்.
எனினும் ஆட்சிப்பீடமேறிய பின்னர் இந்த நாட்டின் கேந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகநகரத்திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றையும் 99வருட குத்தகைக்கு தாங்களே வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். துறைமுகநகரத் திட்டத்;தை இடைநிறுத்தப் போவதாக கூறி நிறுத்தி வைத்திருந்த காலப்பகுதிகளில் ஏற்பட்ட நட்டஈடாக சீனா கோரியிருந்த தொகையான அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சூழவுள்ள 15000 ஹெக்டேயர் நிலப்பரப்பை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தை;திரிபாலசிறீசேன – ரணில் கூட்டரசைத்தள்ளியது.


இந்த சொத்துக்களை சீனாவுக்கு விற்க வேண்டிய தவிர்க்க முடியா நிலைக்கான அத்திவாரத்தை போட்டவர்கள் இந்த ராஜபக்ச அரசாங்கமே. அதன் பின்னர் வந்த அரசாங்கம் அதிலிருந்து தப்ப முடியாதளவுக்கு நிலமை தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வதாக கோட்டாபய ராஜபக்ச கூறுவது நடைமுறை சாத்தியமில்லாத விடயமாகவே நாம் கருதுகின்றோம்.


நாம் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் தந்திரோபாய கொள்கைவகுப்பாளர்கள் பாதுகாப்புத் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள் கோட்டாபய கூறும் கருத்து சாத்தியமற்றது என்றும் சீனா அம்பாந்தோட்டையை பெற்றுக் கொண்டது என்பது வெறுமனே ஒர் வர்த்தக ஒப்பந்தம் அல்ல மாறாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை. அவ்வகையான ஒப்பந்தங்கள் மாற்றப்படுவதாக இருந்தால் இரு அரசாங்கங்களும் இணங்க வேண்டும் என்று.
அவ்வாறான நிலையில் சீனா தனது பூகோள ஆதிக்க நலன் பாதிக்கப்படும் வகையில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக உடன்படுமா என்பது கேள்விக்குறியாகும்.

அவ்வாறு சீனா அந்த ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்வதாக இருந்தாலும் கூட அந்தத் திட்டத்திற்குச் சமமாக தனது நலன்களைப் பேணக்கூடிய வகையில் அதனை விடவும் கூடுதல் நன்மை தரக்கூடிய திட்டங்களுக்கு சிறீலங்கா அரசு இணங்க வேண்டியிருக்கும். இவ்வாறு யதார்த்த நிலை இருக்க கோட்டாபய மேற்கண்டவாறு சீனாவுடனான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யப்போவதாகக் கூறியிருப்பது வேறொரு நோக்கத்திற்காகவேயாகும்.


அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைகளிலேயே இருக்கப்போகிற தென்பது ராஜபக்சக்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியம். எனினும் அம்பாந்தோட்டை சீனாவிடம் இருப்பதானால் இந்தியா மற்றம் அமெரிக்க மேற்கு நாடுகள் தமக்கும் இந்த நாட்டில் கேந்திரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள், விமான நிலையங்கள் கேந்திரரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகள் போன்றவற்றை குத்தகைக்குத் தருமாறு அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் நிலையில் அக்கோரிக்கைகளை நிராகரிதப்பதற்காகவே இவ்வாறான கருத்தைக் கூறியுள்ளார்.


அதாவது அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தவறு என்று தாம் கருதுவதாகவும். அவ்வாறிருக்கு பிறிதொரு இடத்தை உங்களுக்கு (இந்தியா, அமெரிக்கா) வழங்குதனை நியாப்படுத்த முடியாதென்றும் கூறி அவர்களது கோரிக்கையை நிராகரிப்பதற்காகவே அம்பாந்தோட்டை முறைமுக ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென கூறுகின்றார்.


இந்த விடயங்களை நாம் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் எமது மக்கள் இவ்விடயங்களை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக ஆழமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.


அம்பாந்தோட்டை போன்றதொரு துறைமுகம் சீனாவுக்கோ அன்றி வேறு எந்தவொரு நாட்டிற்குமோ வழங்கப்படக்கூடாதென்ற நோக்கத்திற்காகவே 1987 இல் இ;ந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் இணைப்புக்களில் இவ்வாறான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதனை தடைசெய்யும் சரத்துக்களைக் காணலாம். அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் அந்த ஒப்பந்தம் ஊடாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை இந்தியாவுக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மூன்றாந்தரப்பு நாடு ஒன்றுக்கு இந்தியாவின் அனுமதியில்லாமல் வழங்காது என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.


எனினும் இவ்வாறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தும் கூட 20 ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கும் வகையில் கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்தியாவின் அனுதியில்லாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீன வல்லரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தியா இலங்கை தொடர்பான தங்களது அணுகுமுறை பற்றி விசேடமாக தங்களது வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இது வரைக்கும் இந்தியா இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் 13ஆம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துவதன் மூலம் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று கருதுகின்றது.
கோட்டாபயராஜபக்ச ஜனாதிபதியாகிய பின்னரான இந்திய விஜயத்தின்போது கூட இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற வகையில் 13ஆம்திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளார்.


ஆனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கு 13ஆம் திருத்தச் சட்டம் ஓர் தீர்வு அல்ல என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.


13ஆம் திருத்தச் சட்டமானது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற பெயரில் அன்றைய ஜே,ஆர்.அரசாங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓர் சட்டமாகும். இந்திய இலங்கை ஒப்பந்தம் வேறு 13ஆம் திருத்தச் சட்டம் என்பது வேறு. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியே அந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அந்த 13ஆம் திருச்சட்டம் நிறைவேற்றப்படும்போது இந்தியாவின் ஒத்துழைப்போ இந்தியாவின் அனுமதியோ இந்தியாவின் அனுசரணையோ கேளாமலேயே கொண்டுவரப்பட்டது. அதன் இறுதி வடிவத்தை தான் ஏற்றுக்கொள்வதாகக் கூட இந்திய கூறவில்லை. தமிழ்க் கட்சிகளுக்குகூட அந்த வரைபு காட்டப்படாமலேயே பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 13ஆம் திருத்தச் சட்டம் ஓர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தமிழ்க் கட்சிகளுக்குக்கூட அந்த விடயம் தெரிய வந்தது.


அன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் 13ஆம் திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்பதனைச் சுட்டிக்காட்டி அதனை நிறைவேற்றுவதனை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார்கள்.


யாதார்த்தம் என்னவெனில் ஒரு புறம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு உண்டு. மறுபுறம் 20 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவினுடைய வட்டத்தினுள் இலங்கை வருவதற்கு இணங்கிய நிலையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினை தீர்வுக் கோரிக்கையை 13ஆம் திருத்தத்தினுள் முடக்குவதற்கு 13ஆம் திருத்தத்தினை தீர்வு என்றும் பெயரில் சிறீலங்கா அரசாங்கம் கொண்டுவந்தபோது இந்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது.


ஆனால் இன்று 20 ஆண்டுகளுக்குப் பின்னர் எதனை இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஏதுவாக இந்திய இலங்கை ஒப்பந்தத்திலுள்ள அந்த விடயங்களை கடைப்பிடித்து இந்தியாவுடன் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்களோ அதனை மீறி இன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சவால் விடுக்கும் விதமாக பல சம்பவங்கள் நடைபெற்று முடிந்து விட்டன.
அவ்வாறான சூழலில் இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் நன்மை இ;ல்லாத இந்தியாவுக்கும் நன்மை ஏற்படுத்தாக சிறீலங்குக்கும் எந்த அழுத்ததத்தையும் ஏற்படுத்தாத ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இருக்கக் கூடிய 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபைகளையும்தான் தமிழ் மக்களின் தீர்வாக வலியுறுத்தப் போகிறதென்றால் இது இந்தியாவுக்கும் ஒருபோதும் நன்மையை கொடுக்கப்போவதில்லை என்பதே எமது கருத்து.


அந்த வகையில் ஆணித்தரமாக நாம் இந்தியாவிடம் வலியுறுத்தும் விடயம்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு இல்லை. அந்த ஒப்பந்தத்தில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம் எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதனை நாம் எதிர்ப்புக்கவில்லை.


ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறையில் பேண வேண்டும் என்பதற்காக இந்த ஒப்பந்தத்துடன் நேரடியான தொடர்பில்லாத 13ஆம் திருத்தச் சட்டத்தையே தமிழர்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.


இந்த வகையியேலேயே நாம் இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்பும் விடயம்
இந்தியாவின் நலன்கள் முழுமையாகப் பாதிக்கப்படுமளவுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த 20 வருடங்களாக வலியுறுத்தி வந்த 13ஆம் திருத்தம் என்ற விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் ஊடாக இந்தியாவுக்கும் எந்த நன்மையும் வரப்போவதில்லை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் எந்த நன்மையும் வரப்போவதில்லை என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.
இந்தியாவும் வெளி சக்திகளும் நாமும் ஒரு புள்ளியில் சந்திப்பதற்குத் தயாராக உள்ளோம். தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு வரக்கூடிய வகையில் ஓர் மாற்றுத் திட்டத்தி;ற்கு ஒரு புதிய அரசியல் தீர்வுக்கு நாம் செல்ல வேண்டும்.


அந்தப் புதிய அரசியல் தீர்வு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அதே சமயத்தில் தமிழ்த் தேசத்தையும் அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வாகவே இருக்க முடியும். அவ்வாறானதொரு இடத்திலேயே தமிழ் மக்களின் நலன்களும் இந்தியாவின் தேசியபாதுகாப்பு நலன்களும் பாதுகாக்கப்படலாம்.

ஓற்றையாட்சிக்குள் இருக்கும் 13ஆம் திருத்தத்தை தீர்வாக வலியுத்தினால் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என்பது ராஜபக்சக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது கோட்டாபய ராஜபக்ச 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என கூறியுள்ளார். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத 13ஆம் திருத்தத்தையே வழங்கத் தயாரில்லாத அதனையே மோசமாகக் குறைக்க விரும்புகின்ற ஒரு தரப்பு ஒருபோதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யப்போவதில்லை. ஆகவே 13ஆம் திருத்தத்தை தமிழர்களை நிராகரிக்கச் செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் தூக்கியெறியலாம் என்ற அடிப்படையிலேயே ராஜபக்சக்கள் சிந்திக்கின்றார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற பெயரிலேயே 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் நிராகரித்தால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் தாங்கள் நிராகரிக்கலாம் என்பதே அவர்களது திட்டம். ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு கொண்டுவருதல் என்ற பெயரிலேயே 13ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் அதனை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் தேவைப்பாடு ஓர் கேள்விக்குறியாகும். அதன் பின்னர் இந்தியாவுக்கு சட்டபூர்வமாக இலங்கையில் இருக்கக்கூடிய பிடியும் கேள்விக்குறியாகும். இதுவே ராஜபக்சக்களின் நோக்கமாகும்.

ஆனாலும் தமிழ் மக்களாகிய நாம் அவர்களது நோக்கத்திற்கு மாற்றீடாகக் கூறுகின்றோம் இலங்கை இந்திய ஒப்பந்தம் வேறு 13ஆம்திருத்தம் வேறு. தமிழர்கள் நாம் 13ஆம் திருத்தச் சட்டத்தையே தீர்வாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோமே தவிர ஒட்டுமொத்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் நாம் நிராகரிக்கவில்லை.
இந்த நுணுக்கத்தை இந்தியா விளங்கிக்கொண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய, தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக அமுல்ப்படுத்தக்கூடிய வகையிலே தீர்வைப் பெற்றக் கொடுக்கும் வகையில் அவர்களது வெளிவிவகாரக் கொள்கைகளை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனக்கோருகின்றோம்.மாற்றிக் கொள்ளாவிட்டால் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஒருபுறம் இருக்க இந்தியா வல்லரசுக்கும் எதிர்காலத்தில் பாரதூரமான பெரும்பாதிப்புக்களை உருவாக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேககங்களும் இல்லை.


எனவே இந்திய அரசானது வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யது தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதே ஈழத் தமிழ் மக்களதும் இந்தியாவினது தேசிய நலன்களுக்கும் உகந்ததாக அமையும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.ய

About சாதுரியன்

மறுமொழி இடவும்