பதவி நீக்க நோட்டீஸ் அனுப்பிய அரசு கொறடா ராஜேந்திரன் நீக்கம் செய்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்த நிலையில் அவர்களுக்கு எதிராக தினகரன் 21 எம்.எல்.ஏ.க்களுடன் தனியாக செயல்பட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து 19 எம்.எல். ஏ.க்கள் கட்சி கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு சிபாரிசு செய்துள்ளார். இதை ஏற்று எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாகிகளை நீக்கி மாற்றம் செய்து வரும் டி.டி.வி. தினகரன் அரசு கொறடாவையும் கட்சி பதவியில் இருந்து நீக்கி வைப்பதாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கொறடா எஸ்..ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கிறார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தினகரன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவருக்கு பதில் அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பெ.முத்தையனை அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தினகரன் நியமனம் செய்துள்ளார்.
இதேபோல் சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் எம்.பி.யும், இளைஞர், இளம் பெண்கள் பாசறை பொறுப்பில் இருந்து திருச்சி குமார் எம்.பி.யும் நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார்.