மாணவி அனிதா தொடர்பில் சாதிய வெறியை காட்டும் ஆங்கில ஊடகங்கள்!

மாணவி அனிதா மரணமடைந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து ஆங்கில ஊடகங்கள் அவரை தலித் மாணவி, தலித் பெண் அனிதா என்று குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அச்சு, ஆன்லைன், தொலைக்காட்சி என எந்த வித்தியாசமும் இல்லை.

ஆங்கிலத்தில் வெளியான, வெளியாகும் அனைத்து செய்திகளிலும் இதேதான். இது சமூக நீதி ஆர்வலர்களை கோபமுறச் செய்துள்ளது.

அது என்ன தலித் மாணவி? தலித் என்பதை அவர் சாதியைக் குறிக்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிடுகிறார்களா அல்லது அதுதான் அவரது கல்வி உரிமைக்கான தகுதி எனச் சுட்டுகிறார்களா?

அனிதா ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழைப் பெண்தான். என்றாலும், அவருக்கான தகுதி அதுவன்று. வாழ்க்கையில் மிகவும் போராடி தனக்கான தகுதியை வளர்த்துக் கொண்ட மாணவி அவர். ஒரு பொதுப்பிரிவு மாணவிக்கான தகுதிகளோடு அவர் களத்தில் நின்றார். இரும்புப் பெண்மணி ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த நீட், ஒரு நாளும் தமிழ்நாட்டுக்கு வராது என்ற நம்பிக்கையுடன் தனக்கான வாய்ப்புக்குக் காத்திருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்ட மேல்நிலைக் கல்வியை முடித்த, அரசு நிர்ணயித்ததைவிட அதிக தகுதியோடு மருத்துவக் கல்விக்குக் காத்திருந்த அந்த ஏழைப் பெண், திடீர் நீட் திணிப்பை எதிர்ப்பார்க்கவில்லை. அவரைப் போல பல அனிதாக்கள். சகல தகுதிகளோடும் களத்தில் நின்று, போராடிப் பார்த்தும் பலனில்லாமல், அந்த ஏமாற்றம் தாங்காமல் தற்கொலையை நாடிய அனிதாவை, வெறும் தலித் பெண் என்ற அளவில் மதிப்பிடுவது எத்தனை பெரிய சாதி வெறி?

இது அனிதா என்ற பெண்ணின் தகுதியை மறைத்து, அவர் சாதியை மட்டுமே முன்னிறுத்தி சலுகை கோரும் செயலாகும். அனிதா தன் சாதியைக் காட்டி சலுகைக் கேட்கவில்லை. தன் 1176 மதிப்பெண்களைக் காட்டி தனக்கான உரிமையைக் கோரினார். நீட் என்ற மாபெரும் தவறால் உரிமை மறுக்கப்பட்டார். அதே சமயம் தமிழ் ஊடகங்கள் அனிதாவை அப்படி ஒருபோதும் சித்தரிக்கவில்லை. அனிதா என்ற ஏழை மாணவி, அத்தனை தகுதியுமிருந்தும் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டதை அனைத்து தமிழ் ஊடகங்களும் சரியாகவே பதிவு செய்தன. காரணம், பெயருக்குப் பின் சாதியைப் போட்டுக்கொள்வதை அவமானமாகக் கருதும் பெரியாரின் மண் இது.

இன்னொரு பக்கம், அனிதாவை தலித் மாணவி என்று குறிப்பிடுவது தவறு என்றால், அதைக் காட்டிதானே அவர்கள் சலுகை பெறுகிறார்கள்… என்று குதர்க்கமாக சிலர் கேட்டுள்ளனர். இன்னமும் கூட ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ள அந்த மக்களுக்கு அண்ணல் அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமை அது. சலுகை அல்ல. இன்னும் கூட அந்த உரிமையை முழுமையாக அந்த மக்களுக்கு இந்த அரசுகள், சமூக அமைப்புகள் வழங்கவில்லை. வழங்க அவர்களுக்கு மனசுமில்லை. அதற்கு கண்முன்னே நடந்த உதாரணக் கொடுமைதான் அனிதா மரணம்.

இத்தனை சட்டப் பாதுகாப்பு தந்திருந்தாலும், சட்டப்படியான உரிமைகள், தகுதிகள் இருந்தாலும் அனிதாக்களுக்கு நேரும் அவலங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன? ஆங்கில ஊடகங்களே, தகுதிமிக்க அனிதாக்களை வெறும் தலித் பெண்களாகப் பார்க்காதீர்கள்…உங்களைப் போலவே சகல தகுதிகளும், உரிமைகளும் கொண்டவர்களாகப் பாருங்கள்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்