மாணவி அனிதாவின் உடலுக்கு சொந்த ஊரில் கிராம மக்கள் அஞ்சலி

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அரியலூர் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றார். ஆனால் நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் அவர் மிகவும் மனமுடைந்தார். மன அழுத்தத்துடன் காணப்பட்ட மாணவி அனிதா, நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனிதா தற்கொலை செய்துகொண்டதை அறிந்து, அவரது வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது பெற்றோருக்கு ஆறுதலும் தெரிவித்தார். இதையடுத்து, அனிதாவின் உடல், அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாணவி உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழுமூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள வியாபாரிகள், அரியலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்