கரைதிரும்பிய வல்வெட்டித்துறை மீனவர் மருத்துவமனையில் அனுமதி!

கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இன்று மதியம் கரைதிரும்பிய வடிவேலு-சிறிகாந்த் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலை வேளையில் கடலுக்குச் சென்று மதியத்திற்குள் கரைதிரும்புவது வழக்கமான நிலையில் மிகக் குறைந்தளவேயான குடிநீரையே எடுத்துத் சென்றிருந்தார். இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் ஏற்பட்ட திடீர் நீர் ஓட்டத்தில் சிக்கியதால் உதவி கிடைக்கும் வரை இருக்கும் குடிநீரை சேமிக்க வேண்டியிருந்ததால் ஒவ்வொரு மூடி நீராகவே அருந்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உணவேதுமின்றிய நிலையில் சிறியளவு குடிநீர் அருந்தியதால் ஏற்பட்ட உடல் நலக்குறைவையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்ச்சத்துக் குறைபாட்டை ஈடு செய்வதற்காக அங்கு சேலைன் ஏற்றப்பட்டது.

நடந்தவை குறித்து மீனவர் சிறிகாந்த் அவர்கள் தெரிவிக்கையில்…

வழமை போன்று தூண்டில் தொழிலுக்கு கடந்த வியாழன் காலை 5.30 க்கு கடலுக்கு சென்றேன். தாளையடிக் கடல் பகுதிக்கு உயரவாக சென்றுகொண்டிருந்த போது படகு இயந்திரந்திரத்தில் கேளாறு ஏற்பட்டிருந்தது. அதேவேளை இதுவரை கால கடல் அனுபவத்தில் கண்டிராத கடல் நீர் ஓட்டம் அங்கு காணப்பட்டது.

வானம் முழுவதும் இருட்டிய நிலையில் தொலைவில் கடல் நீரை மேகம் இழுத்துக் கொண்டிருப்பதை பார்க்ககூடியதாக இருந்தது. கடல் நிலவரம் நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியதால் நங்கூரமிட்டு பாதுகாப்பாக ஓரிடத்தில் நிற்பதற்கு முயன்றேன். நான் நின்ற இடம் அதிக ஆழமானதாக இருந்தால் நங்கூரம் கடலடியை தொடுமளவிற்கு கயிறு இல்லாமல் இருந்தது. ஒருவாறு சுதாரித்து தூண்டிலுக்கு பயன்படுத்திய தங்கூசி கயிறை ஐந்து பட்டாக சேர்த்து நங்கூரத்தை இணைத்திருந்த கயிருடன் சேர்த்துக் கட்டி ஒருவாறு படகு கடல் நீரோடு அடிபட்டு போகாதவாறு பாதுகாத்தேன்.

நிற்கும் இடம் குறித்த திக்குத் திசை தெரியாது நின்று ஏதாவது படகுகள் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று வெள்ளிக்கிழமை ஐந்து/ஆறு இந்திய இழுவைப் படகுகள் என்னைக் கடந்து சென்ற போது அபயக் குரல் எழுப்பி உதவி கோரிய போதிலும் அவர்கள் கண்டுகொள்ளாது சென்றுவிட்டார்கள்.

இருந்தாலும் நம்பிக்கை இழக்காது காத்திருந்தேன். தங்குகடல் சென்ற டாங்கி படகுகள் அல்லது தென்னிலங்கை டாங்கி படகுகள் வடமாராட்சி நோக்கி வரும் வழித்தடத்திற்கு அருகாமையில் காத்திருந்த போதுதான் இன்று காலை படகொன்று கண்ணில் தென்பட்டது. கத்திக் குரலெழுப்பி உதவி கோருவதற்கு சக்தியற்று இருந்த காரணத்தால் கத்திக் கத்தி மேலும் சக்தியை இழக்கக்கூடாதென்பதால் படகில் இருந்த பிளாஸ்ரிக் பட்டையால் படகில் அடித்து ஒலியெழுப்பினேன்.

அது அவர்களுக்கு கேட்கவில்லை. அந்தப் படகில் இருப்பவர்களது பார்வையில் ஓரளவு படும் தொலைவுக்கு வந்த போது படகின் முன்பகுதியில் ஏறி நின்று உதவிகோரி சைகை செய்தேன். தெய்வாதீனமாக அவர்கள் என்னை பார்த்துவிட்டார்கள். அருகே வந்து உடனடியாக தமது படகில் ஏற்றியதுடன் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து குழிசை ஒன்று கொடுத்தார்கள். பின்னர் உணவு கொடுத்தார்கள். என்னால் சாப்பிடமுடியவில்லை. தாகம்தீர தண்ணீரைக் குடித்தேன்.

நீர்கொழும்பைச் சேர்ந்த படகில் நான்கு சிங்கள மீனவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு தமிழ் தெரிந்திருந்தது. தாங்கள் ஆழ்கடல் மீன்பிடிக்கு வந்ததாகவும். எதிர்பார்த்த மீன்கள் பிடிபடாததுடன் படகிற்கு தேவையான பொருட்கள் முடிந்துவிட்டதால் பருத்தித்துறை துறைமுகத்திற்கு சென்று ஓரிருநாள் ஓய்வெடுத்து பொருட்களையும் வேண்டிவரச் சென்றுகொண்டிருப்பதாகவும் எனது படகையும் கட்டி இழுத்துவந்து பருத்தித்துறையில் விடுவதாக கூறி அழைத்து வந்தார்கள்.

அவர்களின் போனை வாங்கி மனைவிக்கு தொடர்பெடுத்து நான் பாதுகாப்பாக இருக்கும் தகவலை தெரிவித்தேன். சிறிது நேரத்தில் ஊரில் இருந்து என்னை தேடி படகுகளில் வந்தவர்கள் எனது படகின் அடையாளத்தை வைத்து இனம்கண்டுகொண்டார்கள். ஒருவாறு நல்லபடியாக கரைதிரும்பியது பெரும் சந்தோசமாக இருக்கு. கடவுள் போல் வந்து காப்பாற்றி உதவிய தென்னிலங்கை மீனவர்களின் உதவியை என்றென்றும் மறக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

செவ்வி மற்றும் புகைப்படம் ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்