ஜனாதிபதியைச் சந்திக்கும் மா்ம நபர்கள் யார்?: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி!

நாளை சிறீலங்கா ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான உறவுகள் அல்ல என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சிறீலங்கா ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிகின்றோம்.

அவர் எதற்காக சந்திக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு நட்ட ஈடு வழங்க சந்திக்கின்றாரா? வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து எம்மைச் சந்தித்த ஜனாதிபதி இன்றுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பு எதற்காக? வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காகவா? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என நாம் இங்கு உள்ள நிலையில், இவர்கள் அழைத்து செல்வது யாரை?

இந்த ஊடக சந்திப்பின் மூலம் நாம் பகிரங்கமாக தெரியப்படுத்துவது யாதெனில், நாளை இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான உறவுகள் அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்