கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களப்பணிப்பாளரின் கருத்துக்கு ரவிகரன் கடும் கண்டனம்.

வடக்கு கடலில் மீன்பிடிப்பதற்கு தெற்கு மீனவர்களுக்கு கொழும்பு அனுமதி கொடுத்துவிட்டால் அதில் எவரும் தலையிடமுடியாது என்று கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை மீனவர்களின் வருகையால் வடபகுதி மீனவர்களின் வாழ்வுடைமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட தொழில்களையும் மேற்கொண்டு எமது மீனவர்களை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றார்கள்.

சட்டம் ஒழுங்குகளை பாதுகாக்க வேண்டும் ; சட்டமுரண் மீன்பிடிகளை தடைசெய்ய வேண்டும் என்று அறத்தின் பக்கம் நின்று எமது மீனவர்கள் வாதாடுகின்றார்கள். நீதியின்மை, முறைகேடான தொழில் நடவடிக்கைகளை 2016.04.02ஆம் திகதி மாவட்ட செயலகம், முல்லைத்தீவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மீனவர்கள் சுட்டிக்காட்டினார்கள். பிழையான தொழில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்ற சுட்டிக்காட்டலை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இன்று வரை எந்தவித நடவடிக்கைகளும் எடுத்தபாடில்லை. இதன் பின்பும், நடைபெறும் மோசமான தொழில் நடவடிக்கைகள் பற்றி கடந்த 2017.08.10ம்திகதி மாகாண சபைக்கூட்டத்திலும் தெரிவித்திருந்தேன்.

இச்சட்டமுரண் செயற்பாடுகள் தொடர்பாக 2017.08.14ஆம் திகதி மதிப்புறு முதலமைச்சர் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுக்கு கடிதம் அனுப்பி எனக்கும் அதன் பிரதியை அனுப்பியிருந்தார். அதற்கு மறுமொழியும் வகையில் கடந்த 2017.08.22ம் திகதி கௌரவ கடற்றொழில் அமைச்சின் தனிப்பட்ட செயலாளர் திரு.G.G.C. காமினி அவர்கள் இச்சட்டமுரண் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக கடற்றொழில் திணைக்களப்பணியாளருக்கு கடிதம் அனுப்பி மதிப்புறு முதலமைச்சர் அவர்களுக்கும் எனக்கும் பிரதியை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப்பணிப்பாளர் திரு.எம்.சி.எல் பெனான்டோ அவர்கள் தெரிவித்தாக பின்வரும் செய்தியை உதயன் நாளிதழ் மூலம் (2017.09.08) பார்க்க முடிந்தது.

செய்தி.
உதயன் 2017.09.08ஆம் திகதி

வடக்குக்கடலில் மீன்பிடிப்பதற்கு தெற்கு மீனவர்களுக்கு கொழும்பு அனுமதி கொடுத்து விட்டால் வடக்கு அதிகாரிகள் எந்தவித இடைஞ்சல்களையும் செய்யக்கூடாது இதில் உள்;ர் மீனவர்களின் பிரச்சினைகளை கரிசனைகளை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப்பணிப்பாளர் எம்.சி.எல் பெனான்டோ தெரிவித்தார்

முறைகேடான தொழில்களை செய்தும் எமது மீனவர்களின் வளங்களை அழித்தும் எம்மை நடுத்தெருவில் விடுவதற்கு முயலும் சண்டித்தன செயல்பாடுகளை கொழும்பிலிருந்து அல்ல எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துக்களை சரியான முறையில் விட வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி வைக்கின்றேன்.
வடபகுதி மீனவர்களை வேதனைப்படுத்தும் வகையில் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்