வடமாகாண முதலமைச்சருக்கெதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மீண்டும் தமிழரசுக் கட்சி முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சத்தியலிங்கம், குருகுலராஜா மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கியதால் ஆத்திரமடைந்த தமிழரசுக் கட்சி வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததுடன், சி.வி.விக்னேஸ்வரனே தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சராகத் தொடரவேண்டுமென வலியுறுத்தின.

அத்துடன், வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர் அணிகள் போராட்டம் நடத்தின.

இதனையடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், வட மாகாண சபையின் ஆளும் கட்சியான இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணைந்து மீண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், மீண்டும் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், மீண்டும் அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு முதலமைச்சருக்கு உண்டென்றும், முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளும் முறியடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்