முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவரது பயணம் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் பௌத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த நிகழ்வின் பின்னர் இந்திய நடுவண் அரசின் முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்துவிட்டதாக புதுடில்லி உணர்வதாலேயே இந்த அதிரடி இராஜதந்திர காய்நகர்த்தலுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. தமது பக்கம் இலங்கை அரசை வளைத்துப் போடுவதற்கு, மகிந்தவை ஆயுதமாகப் பாவிப்பதற்கு புதுடில்லி தீர்மானித்துள்ளது. அதன் காரணமாகவே மகிந்த இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மகிந்த ஆட்சியில் இருந்தபோது சீனாவின் பக்கம் சாய்ந்து செயற்பட்டார் என்பதால், இந்தியா அவர் மீது அதிருப்தியில் இருந்தது. மகிந்த ராஜபக்ச அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கூட இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்திருந்தனர்.
தற்போது இலங்கை அரசும் அதேபாணியில் செயற்படுவதால், அதனை தமது பக்கத்துக்கு திருப்புவதற்கு இந்தியா இந்த முயற்சியைக் கையிலெடுத்துள்ளது. இலங்கைக்கு கடந்த மே மாதம் வருகை தந்த இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சவை தனியே சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

