வித்தியா படுகொலையின் தீர்ப்பு நாள் அறிவிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் இறுதித் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் இன்றைய தினம் குறிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் (Drial at Bar), யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு கடந்த பல மாதங்களாக நடந்து வந்தது.

வழக்கின் சாட்சிய மற்றும் தடயவியல் விசாரணைகள் அனைத்தும் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு என நடந்துவந்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதாய விளக்கம் முன்னிலையில் இந்த இறுதிக்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதன்படி வழக்கின் தொகுப்புரை நாட்களாக நேற்றும் இன்றும் குறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது. அதில் ஏழு குற்றவாளிகளின் குற்றங்கள் வழக்குத் தொடுநர் தரப்பால் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இடம்பெற்றிருந்தன.

தொகுப்புரைகள் யாவும் நிறைவடைந்த நிலையிலேயே வழக்கின் இறுதித் தீர்ப்பெழுதும் நாள் நீதிபதிகள் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது

About இலக்கியன்

மறுமொழி இடவும்