மகிந்தவை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்

சில் துணி விநியோகத்திற்கு தானே உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பேற்கும் நிலையில் அது தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்து அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென அமைச்சரவை இணை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரச நிதியை பயன்படுத்தி முறையற்ற வகையில் சில் துணி விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து சில் துணியை விநியோகிப்பதற்கு தானே உத்தரவிட்டதாகவும் , அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கருத்துக்கள் வெளியிட்டு வருவது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ராஜித சேனாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இந்த கருத்துக்களை முன்னர் கூறியிருக்க வேண்டும். 24 நாட்களாக வழக்கு விசாரணைகள் நடந்தன. அதன்போது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்ட பின்னர் நானே சில் துணியை விநியோகிக்க உத்தரவிட்டதாக கூறுகிறார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று உள்ளே இருப்பவர்களை பார்த்துவிட்டு வந்து வீரர் போல் கதைக்கின்றார். உண்மையில் இதனை வழக்கு விசாரணையின் போது தெரிவித்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும் தானே உத்தரவிட்டதாக குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரால் வெளியிடப்படும் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் சில் துணி தொடர்பாக வழக்கை தொடரலாம். இதன்மூலம் நீதிமன்றத்தின் முன் அவரை கொண்டுவர முடியும். . என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்