பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்த காவல்துறையினருக்கு பிணை!

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் நாள் யாழ். குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

இன்று காலை யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நடைபெற்றபோதே இப்பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் மற்றும்அரசறிவியல் மாணவனான நடராஜா கஜன் ஆகியோர் பலியாகியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர்கள் உயிரிழந்தமையும் நிரூபணமாகியது.

இதற்கமைய, இச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ். காவல்நிலையத்தைச் சேர்ந்த 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ஐந்து காவல்துறையினராலும் பிணை அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுக்கு பிணை அனுமதியினை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஒவ்வொருத்தருக்கும் தலா 2 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையும், 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஐவரும் ஒவ்வொரு மாதமும் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ஐவரின் கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்