மழை காலம் ஆரம்பித்துள்ளதால் இராணுவத்தினர் முன்வைத்த மூன்று மாத கால கோரிக்கையை விடுத்து, தமது அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு கேப்பாபுலவில் தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கேப்பாபுலவு மக்களின் தொடர்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு மாதங்களை கடந்துள்ள நிலையில் தமது உரிமைக்கான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆரம்பித்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியது போன்று தொடர்ந்தும் தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரைஆதரவு வழங்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் விளையாட்டு மைதானங்களை அமைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் ஒருநேர உணவிற்கே தாம் போராட வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
