20ஆவது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் வந்தால் அதனை மீள்பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம்.
இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தெரிவிக்கையில், அரசாங்கமானது சட்டமூலமொன்றைக் கொண்டுவரும்போது அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டிய தேவை மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கிருக்கின்றது.
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதனால் எமக்கு எந்தவிதப் பாதகமுமில்லையென தெரிவித்துள்ளார்.