இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா நேற்றைய தினம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாளாகும். இந்த நாளில் திலீபனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள், மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். நேற்று காலை ஆரம்பித்த இந்த அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை நடைபெறும் என மாணவர் ஒன்றிய தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த அஞ்சலி நிகழ்வின் போது திலீபனின் பாடல்கள் இசைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. எனினும் பல்கலைக்கழக வாயில்களில் வழமை போன்று புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.