இறுதிப் போரில் நடந்த போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கை அரசு நம்பகமான நடவடிக்கைகளை எடுக்காமையால் பன்னாட்டு விசாரணையை முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் ஜெனிவாவில் எச்சரித்திருந்தார்.
அவரின் இந்தக் கருத்தால் கடும் சீற்றமடைந்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அல் ஹுசைனை பன்னாட்டு ஆண் விபசாரியென்றும் விமர்சித் துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று முற்பகல் அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எச்சரிக்கைவிடுத்து மனித உரிமைகள் ஆணையாளர் ஆற்றிய உரை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடுகளை அச்சுறுத்துவதற்குரிய எந்தவொரு அதிகாரமும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைனுக்குக் கிடையாது.
அவரைப் பன்னாட்டு விபசாரி என்றே கூறவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக வேண்டுமென்பதே அவரது கனவாக இருக்கின்றது.
அதை அடைவதற்காகவே இலங்கையைக் களமாக, – கைம்பொம்மையாகப் பயன்படுத்துவதற்கு முற்படுகின்றார்.
தான் எதைக் கூறினாலும் அதற்கு இலங்கை பதிலளிக்காது என்பதை அறிந்துதான் மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஐ.நா. பாதுகாப்புச் சபை செய்யவேண்டியதையே இன்று ஹூசைன் செய்து கொண்டிருக்கின்றார் – என்றார்.
