விடுதலைப்புலிகளின் காலத்தில் செயற்படுத்தப்பட்ட கைவேலி 25 வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்த மக்கள் இறுதிப்போரின் பின்னர் மீள அவ்விடத்தில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
மீள்குடியேற்றத்தின் போது அவ்விடத்திற்கு மக்கள் வருகைதந்தபோது பாதுகாப்பு அறிவித்தல் ஊடாக இவ்விடப்பரப்பு தடைசெய்யப்பட்ட இடமாக காட்டப்பட்டிருந்தது. பின்னர் அறிவித்தல் பலகை எடுக்கப்பட்டதும் வனவளப்பாதுகாப்பு பிரிவினரால் எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளது. தாம் குடியிருக்க இடம் இல்லாது இன்று வரை உறவினர்களின் வீடுகளிலும் அவர்களின் காணிகளிலும் குடியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முறைப்பாடு ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் கடந்த 2017.09.15ஆம் திகதி கைவேலி 25வீட்டுத்திட்ட மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு குறித்த இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,
மக்களின் முறைப்பாட்டைத்தொடர்ந்து கடந்த 2017.09.15ஆம் நாளன்று காலை மக்கள் குடியிருந்த இடத்திற்கு நேரடியாகச்சென்றேன். தாம் போரின் இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்த வீடுகளின் எச்சங்கள், பயன்படுத்திய கிணறுகள், நாட்டிய மரங்கள், பூங்கன்றுகள் என அனைத்தையும் அவர்கள் எனக்கு காண்பித்தனர். சந்திப்பு நிறைவில் குறைமுன்வைப்பறிக்கை ஒன்றையும் என்னிடம் கையளித்தனர்.
மீள்குடியேறிய காலம் தொட்டு இன்றுவரை அவர்கள் தங்களின் சொந்த இடத்திற்கு மீள்வதற்கான குரலை எழுப்பியவண்ணம் உள்ளனர். மக்களின் கருத்துகள் அனைத்தையும் கேட்டறிந்தேன்.
இது தொடர்பில் வடமாகாணத்தின் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் எதிர்வரும் முல்லை.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் இது தொடர்பில் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் ரவிகரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.