பழனிசாமி முதல்வராவதற்கு ஆதரவாக ஓட்டு போட்டதற்காக எங்கள் மீது நடவடிக்கையா என்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செலவன் கேட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடகில் பேடிங்டன் விடுதியில் செய்தியாளர்களிடம் ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
அவர் கூறியதாவது: எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது திட்டமிட்ட சதி. எந்த தப்பும் செய்யாமல் பழனிசாமியை முதல்வராக்குவதற்காக வாக்களித்ததற்காக எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்களா?
பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்த போது எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அப்போது யாருக்கு பயந்தார்கள். ஆளுநர், குடியரசுத் தலைவர் அனைவரையும் சந்தித்து விட்டோம். இப்போது நாங்கள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது நாங்கள் சட்டசபையில் நீதிமன்ற அனுமதியுடன் இருப்போம். புதன்கிழமை வரை பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அது வரை நாங்களும் குடகு விடுதியை விட்டு செல்ல மாட்டோம்.
ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் மீது நிச்சயம் வழக்கு போடுவார்கள், சட்டப்படி நாங்கள் அனைத்தையும் சந்திப்போம். நீதியைப் போராடித் தான் பெற வேண்டும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.
டிடிவி தினகரன் நாளை திருச்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பிறகு அவர் இங்கு வந்து எங்களை சந்திக்க உள்ளார் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.