சர்வதேச பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும் – ஐ.நாவில் சிவாஜிலிங்கம் அவர்கள்

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 36 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சர்வதேச நீதிப் பொறிமுறையே தமிழர்களுக்கு தீர்வைத் தரும் என்று பேசினார். அவர்களின் உரை பின்வருமாறு,

திரு தலைவர் அவர்களே!

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக அதிருப்திகளும், ஏமாற்றங்களும் அடங்கிய அனுபவத்தையே இலங்கை அரசாங்கங்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.

தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ச்சியாக, மன்றாட்டமாக போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்றவை தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டமைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 2015 செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட 30\1 தீர்மானத்தை நிறைவேற்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எவற்றையும், எடுக்கத் தவறிவிட்டது. மேலதிகமாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக நிராகரித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தன்னிடம் முன்னாள் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா உட்பட 30 பேரும் சரணடைந்த தமிழ் மக்களுக்கு பொறுப்பாக இருந்த பொழுது இழைத்த போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களின் பின்னர் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா திட்டவட்டமாக ஜெனரல் ஜெயசூர்யாவையோ அல்லது எந்த போர்க் கதாநாயகர்களையோ உலகில் உள்ள யாரும் தொடக்கூட அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை சர்வதேச நீதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவையை உணர்த்தி நிற்கிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் சர்வேதேச நீதிப் பொறிமுறை ஊடாகவும், ஐக்கிய நாடுகள் மத்தியஸ்துடன் கூடிய அரசியல் தீர்வு ஊடாகவும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன்.

வணக்கம்.

நன்றி திரு.தலைவர் அவர்களே.

About இலக்கியன்

மறுமொழி இடவும்