அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதாக சுமந்திரனைத் திட்டித் தீர்த்தது கூட்டு எதிரணி!

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியபோது, இந்தச்சட்டமூலத்தை வழிமொழிவதற்கு நீ யார்? எனச் சுமந்திரனைப் பார்த்து கூட்டுஎதிரணியினர் கூச்சலிட்டனர்.

20ஆவது திருத்தச் சட்டவரைபு நிறைவேற்றப்படவேண்டுமானால் மக்களின் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து 20ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதனை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த திருத்தம் சபையில் நிறைவேற்றப்படுமானால் மாகாண சபைகள் மத்தியில் எல்லை நிர்ணயத்தை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். இவற்றை நிறைவு செய்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதே சிறந்தது என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவை எதிர்ப்புவெளியிட்டுள்ளன.

அத்துடன் தாம் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமானால் சில நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

தமது நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தாம் வாக்கெடுப்பில பங்கேற்கப்போவதில்லையெனவும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போது, மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த கூட்டு எதிரணி சுமந்திரனை காரசாரமாகத் திட்டியதுடன், இந்த நகலை வழிமொழிய நீ யார் எனவும் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் கட்சியின் உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு வால்பிடிப்பதாகவும் திட்டித் தீர்த்தனர்.

மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டு செயற்பாட்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் திருத்தச்சட்டம் எதற்கு என்றும் கேள்வி தொடுத்தனர்.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டு தோல்வியைத் தவிர்ப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டம் என தினேஸ் குணர்த்தன குற்றம் சுமத்தினார். இது அரசாங்கத்தின் சதி நடவடிக்கை எனவும் கூறி ஆவேசமாக ஏசினார். இதனையடுத்து அங்கு குழப்பம் உருவாகியதுடன், வாய்த் தர்க்கங்களும் உருவாகியது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்