சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களை அவர்களது பூர்வீக வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கட்டைக்காடு முதல் சுண்டிக்குளம் வரையான 196 சதுரகிலோ மீட்டர் பகுதிகளை உள்ளடக்கியே சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்காவினை அமைக்க சிறிலங்கா அரசு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரித்துள்ளது.

குறித்த பகுதிகளை உள்ளடக்கிய எல்லைப் பகுதியெங்கும் அது குறித்த அறிவிப்புகள் நிரந்தர கட்டுமானத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. அவ்விடங்களில் வாழ்ந்தும் தொழில் செய்தும் வரும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாது குறித்த பகுதிகளை வனஜீவராசிகள் தேசிய பூங்காவிற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதன் அடையாளமாகவே இவ் அறிவுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு வனஜீவராசிகள் தேசிய பூங்காவிற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள இடங்களில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் மக்கள் அதனை உறுதிப்படுத்தும் விதமாக காணி உறுதிப்பத்திரங்களை தாம் வைத்திருப்பதாக தெரிவிக்கும் அவர்கள் தமது இருப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மருதங்கேணி பிரதேச செயலர் மூலம் அரசிற்கு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்கள்.

மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமது போராட்டம் தொடரும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

எமது ஜீவனோபாயத்தினை அழிக்காதே.. வன ஜீவராசிகளுக்கு கொடுக்கும் முக்கியம் எமக்கு இல்லையா..? மக்களின் அன்றாடச் செயற்பாட்டினை குலைக்காதே! அரசே சுண்டிக்குளம் மக்களை மீள் குடியேற்றம் செய்! போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்