சிறிலங்கா சென்ற இம்மானுவேல் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தார், புலம்பெயர் தமிழர்கள் சந்தேகம்

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் சிறிலங்காவுக்குச் சென்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கேஷப் உள்ளிட்டவர்களைச் சந்தித்துள்ளமை தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இவரது சிறிலங்காப் பயணம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் சிறிலங்கா அரசின் வலைப்பின்னலில் வீழ்த்தும் செயற்பாடாக அமைந்துவிடும் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சிங்களவர்களுக்கு ஆபத்தானவர் என சிங்களத் தரப்பால் கருதப்பட்ட அவர், தற்போது சிங்களத் தரப்புடன் சேர்ந்து இயங்கி வருவதால் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவராக மாறியிருக்கின்றார் என மக்கள் வெளிப்படையாக கருத்துக்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

1997 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த இம்மானுவேல் தன்னை தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு அதன் மூலம் தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் அவரது செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக மாறின என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவரது தம்பியான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரின் தீவிர முயற்சிகளை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் சிறிலங்காவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இம்மானுவேலின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இம்மானுவேல் கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி தன் மீதான தடையை நீக்குமாறு கூறியிருந்தார். பின்னர் கோத்தபாய ஊடாக அவரது சகோதரனும் அப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையிலேயே, புதிய ஆட்சியாளர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திய அவர் தற்போது சிறிலங்காவுக்குச் சென்றுள்ளார்.

1997 ஆம் ஆண்டு சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்ற இம்மானுவேல், 20 வருடங்களாக மீண்டும் சிறிலங்காவுக்குச் செல்ல முடியாதவராக இருந்தார்.

தற்போது சிறிலங்காவுக்குச் சென்றுள்ள அவர் கொழும்பிலும் வடக்கிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்.

முக்கியமாக அவர் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கேஷப் உள்ளிட்டவர்களையும் சந்தித்துள்ளார். இவ்வாறான சந்திப்புக்களும் மக்களின் சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்