ஈழம் அமைய, தமிழக, அமெரிக்க மசாசூசெட்ஸ் மாநில சட்டமன்றங்கள் தீர்மானம் – ஜெனீவாவில் வைகோ உரை

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் செப்டெம்பர் 22ஆம் தேதியன்று வைகோ ஆற்றிய உரை:

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27 ஆம் தேதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அவர்களின் உதவி நாடி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

2015 செப்டெம்பர் மாதம் இலங்கை அரசு ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு மிகத் தந்திரமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், அன்டோனியோ குட்டரெஸ் அவர்கள் மனித உரிமைகளின் பாதுகாவலர் ஆவார்.

இந்தியாவில் ஏழரைக்கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தில், 2013 மார்ச் 27 ஆம் தேதியன்று ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுமையும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம் ஆகும்.

1979 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள், அமெரிக்க நாட்டில் உள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தின் சட்டமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிகப் பழங்காலத்தில் இருந்து இலங்கைத் தீவில், தமிழர்களும் சிங்களவர்களும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளையும், மதம், பண்பாடு, வாழுகின்ற பிரதேசங்களையும் கொண்டு இருந்தனர். பிரித்தானியர்கள் அத்தீவை வெற்றி கண்டபிறகு, தங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைத்தனர். எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு முடிவு கட்டவும், அவர்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கவும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரையும், அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வலியுறுவத்துவது என இந்த மசாசூசெட்ஸ் சட்டமன்றம் தீர்மானிக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பிரதிகளை, அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கும் அனுப்புவதெனவும் தீர்மானிக்கின்றது.

மேலும், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர், எட்வர்டு ஜே. கிங் அவர்கள், 1979 மே 22 ஆம் நாளை, ஈழத்தமிழர் நாள் என்று அறிவித்தார் என்பதையும் இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் பிற்காலத்தில், அதே அமெரிக்க அரசாங்கம், முன்பு வகுக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையை இலங்கை நடத்துவதற்குத் துணைபோற்று என்பதையும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகின்றேன்.

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டுகிறேன்.

‘தாயகம்’
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
சென்னை – 8
23.09.2017

About இலக்கியன்

மறுமொழி இடவும்