வரலாற்றுச் சூரியனை விரல்களால் மறைக்கும் ஒரு பகீரதப் பிரயத்தனம்… – ச.ச.முத்து

அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதன், இதற்கு முன்னரும் இலங்கை போய் யாழ்ப்பாணம் போய் வந்தவர்தான். ஆனால் இம்முறை அவர் போனது எல்லோருக்கும் மறந்திருக்காது. மண்ணில் இருந்தபடி அத்தனை பயமுறுத்தல்கள் கெடுபிடிகள், கொலை அச்சுறதுத்தல் என்பனவற்றுக்கு மத்தியில் 30 வருடத்துக்கும் மேலாக ஊடக செயற்பாடு செய்த பரேமஸ்வரன் என்ற பத்திரிகையாளருக்கு பகிரங்கமாக பகீரதன் அடித்தது அத்தனை எளிதில் மறந்து போய்விட முடியாத ஒன்று…

ஒரு மருத்துவ கலாநிதியான அவர் ஊடகங்களை என்னவிதமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம். 2009க்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுகள், கருத்துகள் இல்லாத புலிகளுக்கு பின்பான காலம் ஒன்றை உருவாக்க பல தரப்புகள் முனைந்து நிற்கும் இந்த தருணத்தில், பகீரதனின் யாழ் வருகையும் வீரகேசரி பேட்டியும் நிகழ்ந்துள்ளது.

2009க்கு பிறகு இப்படி வரலாற்றை முழுதுமாக புதைத்து அதன்மீது வெறும் பொய்களை புனைவுகளை நட்டு வைத்து அதுவே சரித்திரம் என்று நிரூபிக்க பல தரப்புகள் முனைகின்றன. அதில் இப்போதைய வரவு அமிர்தலிங்கத்தின் பிள்ளை பகீரதன் ஆகும். 09.09.2017 அன்று இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பகீரதன் என்ற வரலாற்று மேதை அள்ளித் தெளித்த சில விடயங்களை மேலோட்டமாக பார்ப்போம்.

1972ல் ‘தமிழ் புதிய புலிகள்’ அமைப்பு செட்டியால் ஆரம்பிக்கப்போது அதில் அமிர்தலிங்கத்தின் மூத்தமகன் காண்டீபன் இருந்தார். பிரபாகரன் அதில் வந்து சேர்ந்தார். பிறகு பிரிந்து சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார் என்பதே இந்த வரலாற்று மேதையின் புதிய கண்டுபிடிப்பு. இதற்கு பதில் சொல்வதற்கு முன்னம் வரலாற்றை மேலோட்டமாக ஒருமுறை பார்ப்போம்.
1970களின் ஆரம்பத்தில் ஒரு இனம் எழுச்சியடைவதற்கு தேவையான அத்தனை சாத்தியமான விடயங்களும் உள்ளேயும் சர்வதேச அரங்கிலும் நடந்தேறியபடி இருந்தன. உலகம் முழுதும் இளைஞர்கள் மத்தியில் ஒருவித மாற்றங்களுக்கான அலை ஒன்று ஐரோப்பா முதல் ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் என்று எங்கும் எழுந்தாடியபடி இருந்தன.

மானுட வரலாற்றின் மிகப்பெரும் யுத்தங்களில் ஒன்றான வியட்நாம் யுத்தம் 1970களில் அமெரிக்கப் படைகளை அநேகமாக விரட்டி அடிக்கும் வெற்றி வாசலில் நின்றிருந்தன. வியட்நாமின் தலைநகரான சைகோன் எந்த பொழுதிலும் வியட்நாமிய விடுதலை படைகளினால் மீட்கப்பட்டு விடும் என்ற நிலையே அப்போது இருந்தது. உலகம் முழுதும் போராடும் இனங்களுக்கும் அடக்கப்பட்டிருந்த மக்களுக்கும் இது பெரும் உந்துதலாக இருந்தது. உலகின் அத்தனை பெரிய நகரங்களிலும் வியட்நாமிய மக்களுக்கான ஆதரவு ஊர்வலங்கள் திரண்டபடி இருந்தது தினமும். இன்னுமொரு புறத்தில் 1970க்கு ஓரிரண்டு வருடம் முன்னம்தான் சேகுவேரா மகத்தான புரட்சிக்காரன் அதுவரையும் உலகம் கண்டு கேட்டு அறிந்திராத ஒரு புதிய நடைமுறையாக விடுதலை அடைந்த கியூபாவின் அமைச்சர் என்ற பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு, விடுதலைக்கான மக்களுடன் தோள்கொடுக்க துப்பாக்கி ஏந்தி போரிட்டு மரணமடைந்திருந்தார். ஆதிக்கசக்தி நினைத்ததற்கு மாறாக சேகுவேரா மரணித்ததன் பின் இளைஞர்களுக்கு 1970களில் ஒரு பெரும் உத்வேகமான அலையை வழங்கும் பெயராக எழுந்தது.

உலகம் முழுதும் மாற்றங்களுக்கான புரட்சி முன்னெடுப்புகளும் விடுதலை எழுச்சிகளும் வெடித்தெழுந்து நின்ற பொழுதும் அதுதான். அத்தகைய ஒரு காலகட்டம் தமிழ் இளைஞர்களுக்கும் பெரும் உந்துதலை தந்தே இருந்தது. இந்த நேரத்தில் தரப்படுத்தல் முறையும் வந்தது எரியும் நெருப்பில் இன்னும் கொஞ்சம் பெற்றோலை ஊற்றியதுபோல இருந்தது. பிறகு என்ன எங்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு வலுப்பெற ஆரம்பித்தது.

சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத ரீதியில் ஏதாவது ஒரு சிறிய எதிர்ப்பை தன்னும் காட்டுவதற்கான முனைப்புகள் தொட்டம் தொட்டமாக பல ஊர்களில் முளைவிட தொடங்கின. தேசியத் தலைவரும் இந்த காரணிகளால் உந்துதல் பெற்று தன்னைவிட வயதில் மூத்தவர்களான தங்கத்துரை, குட்டிமணி, நடேசுதாசன், பெரியசோதி போன்றவர்களுடன் திரியத் தொடங்குகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான நிதர்சன ஒளிபரப்பான ‘விடுதலைத் தீப்பொறி’ காணொலியில் தேசியதலைவர் சொல்கிறார், 1969ம் ஆண்டு வல்வெட்டித்துறை தனியார்பாடசாலை ஒன்றின் ஆசிரியரான வேணுகோபால் ஆசிரியர் மெதுமெதுவாக ஊட்டிய விடுதலை இலட்சியத்தை அடைய ஒரு அமைப்பு ஒன்றை 1970களில் தேட ஆரம்பித்ததாக. 1971 யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சிங்களதேச கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட்டுக்கு எதிர்ப்பு காட்ட தலைவர் 1971 ஜனவரியில் வேம்படிசந்தியில் பதியுதீன் முகமட்டின் கொடும்பாவியை கட்டி தொங்கவிட்டார். இதுதான் தலைவர் நேரடியாக போராட்டம் ஒன்றில் முதன்முறையாக இறங்கிய நாள்.

அப்போது அவருடைய வயது 17. சிங்களப் பேரினவாதத்தின் தரப்படுத்தல் அதுவரை பல ஊர்களில் ஆளுக்கு ஆள் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை ஒன்று சேர்க்க ஆரம்பித்தது. வேறு ஒரு பக்கத்தால் அதுவரை பிரிந்து பச்சைமண் சுட்டமண் என்று ஒரு போதும் சேரவே மாட்டாது என்று சொல்லிவந்த தமிழரசுக் கட்சியும், தமிழ் கொங்கிரஸ் கட்சியும் 1971ல் ஒன்று சேர்ந்தது. இப்படியான பல நிலைமைகள் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு ஆயுத அமைப்பின் வரவுக்கான பன்னீர்க்குடம் உடைக்கும் பொழுதாக இருந்தது.

தமிழ் மாணவர் பேரவையுடன் இணைந்து சில காலம் தலைவர் செயற்படுகிறார். ஆனாலும் தனித்து தனது நண்பர்களுடன் ஆங்காங்கே சில வேலைகளையும் செய்கிறார். சிறீலங்கா தேசத்தின் குடியரசு நாளான 1972 மே 22ம் திகதி தொண்டமானாறு பஸ் தரிப்பிடத்தில் ஒரு பஸ்ஸை கொழுத்தி குடியரசு நாளுக்கான எதிர்ப்பை காட்டுகிறார். அதே நேரம் மாணவர் பேரவையின் தொடர்பில் 1971 செப்டம்பர் 23ம் திகதி யாழ் துரையப்பா களியாட்ட நிகழ்வு மைதானத்தில் தலைவர் குண்டெறிந்து ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்குகிறார்.

ஆனாலும் இவை எல்லாம் ஏதோ போதாது போலவும் வேகம் காணாது என்பதாகவும் உணர்கிறார். சில தயாரிப்புகளில் பரிசோதனை முயற்சிகளில் இறங்குகிறார். இவரும் தங்கத்துரை, குட்டிமணி, நடேசுதாசன், சின்னச்சோதி, மோகன் ஆகியோர் இணைந்து குண்டு ஒன்று செய்யும் முயற்சியில் 1972 ஒக்டோபர் 5ம் திகதி குண்டு வெடித்துவிடுகிறது. காயமடைகிறார்கள். தலைவருக்கும் காலில் காயம் ஏற்படுகிறது. இதற்கிடையில் அந்நேரத்தில் நடைபெற்ற அனைத்து சாத்வீக போராட்டங்கள், கறுப்புகொடி காட்டுதல், பகிஸ்கரிப்பு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு தலைவர் நின்றார். அதே நேரத்தில் தங்கத்துரை, குட்டிமணி, நடேசதாசன், பெரியசோதி, சின்னச்சோதி, செட்டி, இரத்தினகுமார், சிவராசா, கண்ணாடி பத்மநாதன், சிறீசபாரெத்தினம் என்று பலருடன் பலவித ஆயுத முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டபடி தலைவர் இருந்தார்.

தமிழ் மாணவர் பேரவை மண்கும்பான் தாக்குதல் முயற்சியின் பின் முழுமையாக தேடப்பட்டு சத்தியசீலன் போனறோர் கைதான பின்னர் தலைவரும் 1973 மார்ச் 23ம் திகதி முதன்முறையாக தேடப்படுகிறார். அன்றுதான் அவரைத் தேடி அவருடைய வீட்டுக்கு சிறீலங்கா காவல்துறை வந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக அந்த திடீர் முற்றுகையில் இருந்து தப்பி அதன்பின்னர் ஓரிரு வாரத்தில் தலைவர் தமிழ்நாடு வேதாரண்யம் வந்து விடுகிறார். வேதாரண்யம், சென்னை, திருச்சி என்று சாப்பாடு ஒழுங்காக இல்லாமல் பல நாட்கள் பட்டினியாக அலைந்த போதும் விடுதலை மீதான பெரு விருப்பம் இன்னும் அதிகமாகியே போனது.

விடுதலைக்கான ஒரு கட்டுப்பாடான அமைப்பை இந்த நேரத்தில் தாமே தொடங்க முடிவெடுத்து சென்னை எக்மூரில் இருந்த இரா ஜனார்த்தனத்தின் வீட்டுக்கு போனபோது அங்கே அறிமுகமாகிறார் ஈழத்து நேதாஜி என்று அழைக்கப்பட்ட இராசரெத்தினம் அவர்கள். அவருடைய நீண்டநாள் கனவான புதிய புலிகள் என்ற சொற்பதம் தலைவருக்கு பிடித்துவிட அதனையே அமைப்பின் பெயராக வைத்து கொள்கிறார். மிக தெளிவாகவே இதனை இராசரெத்தினம் தனது நாட்குறிப்பில் எழுதியும் வைத்திருக்கிறார். (இராசரெத்தினம் டயறி 1974- புதன் 4ம் திகதி செப்டம்பர்- தாமிரபரணி புதிய புலிகள் என்ற பெயரை உருவாக்கி கொடுத்தேன் – ஆதாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியேதகபூர்வ பத்திரகை குரல் 5 – டிசம்பர் 1984) இதில் அந்த நேரம் ஜனார்த்தனம் வீட்டில் தங்கி இருந்த காண்டீபனுக்கு எந்தவொரு பங்கும் இருந்தது கிடையாது.

மேலும் பகீரதன் வீரகேசரி பேட்டியில் சொல்வதுபோல தலைவர் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ அமைப்பில் இருந்து பிரிந்து சென்று ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ அமைப்பை ஆரம்பிக்கவில்லை. தலைவரின் இலட்சிய அமைப்பான ‘புதிய தமிழ்ப் புலிகள்’ அமைப்பு அதன் முதலாவது செயற்பாடாக துரையப்பா அழிப்பு செய்தபோது அதில் செட்டி இருந்திருக்கவில்லை. அதற்கு சில மாதங்கள் முன்பே செட்டி கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் 25 ஏப்ரல் மாதம் 1978ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கடித தலைப்பில் முதன்முதலாக வெளியிட்ட அறிக்கை பகீரதன் என்ற வரலாற்று மேதை பார்த்திருக்கவில்லை போலும். அதில் மிக தெளிவாகவே புதிய தமிழ் புலிகள் என்ற ஆரம்பப் பெயர் 05.05.1976ல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தலைவரால் உருவாக்கப்பட்ட புதிய தமிழ் புலிகள் அமைப்பின் தொடர்ச்சிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இந்த அமைப்புக்கு உரித்தானவர்கள் ஆயிரமாயிரமாக அர்ப்பணம் செய்த மாவீரர்கள், அவர்களுக்கு துணைநின்ற பொது மக்கள், அனைத்து தமிழ் மக்கள் என்று அனைவருமே. இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான அமைப்பை உருவாக்கியவர் தேசியதலைவரே. அதனை நிராகரிப்பது என்பது சூரியனை விரல்களால் மறைப்பது போன்றது. எத்தனை கரங்கள் முயன்றாலும் அது முடியாது. ஏனென்றால் அந்த அதிமானுடனை அவரது வரலாற்றை காக்கும் உண்மையான சக்தி இந்த மக்களே.

நன்றி: ஈழமுரசு

About இலக்கியன்

மறுமொழி இடவும்