ஜெயலலிதா மரணத்திற்கு பதில் சொல்லவேண்டியவர்கள் யார்? போட்டுடைத்தார் தினகரன்

ஜெயலலிதா மரணம் குறித்து பதில் சொல்ல வேண்டியது தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம்தான் என்று டிடிவி தினகரன் கூறினார். இது குறித்து அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தொடங்கி மரணத்துக்கு பிறகு வரை சசிகலா மீது திட்டமிட்டு பொய்யான வதந்தியை பரப்புகிறார்கள். கடந்த நாலைந்து மாதமாக பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் துரோகத்தின் உச்சக்கட்டத்துக்கே சென்று சசிகலா மீது பொய் பிரசாரம் செய்கிறார்கள். அமைச்சர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசி அவர்களே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்பலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்பலோ மருத்துவர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளி நாட்டு மருத்துவர்கள் எல்லோருக்கும் தெரியும். கடைசியாக பங்கேற்ற விழாவின்போது ஜெயலலிதா சோர்வாக காணப்பட்டார்.

அவர் தனது உடல்நிலை பற்றி வெளியில் சொல்லாததால் வேறு யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் குடும்பத்தில் 68 வயது வரை இருந்தவர் அவர் மட்டும்தான். இப்போது எதிரிகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுவாழ்வுக்கு வந்து விட்டால் குற்றச்சாட்டுகள் வரும். ஜெயலலிதாவை பற்றியே ஒரு கற்பனையான குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்று கூட குற்றச்சாட்டு இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா எதுவும் முடிவு எடுக்கவில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டியது தலைமை செயலாளர், ஆலோசகர், அதிகாரிகள், அமைச்சர்கள்தான். ஜெயலலிதாவை தோழியாக, தாயாக சசிகலா பார்த்துக் கொண்டார். அப்பலோ மருத்துவ மனையில் 4 பேர் உட்கார்ந்து கொண்டு யாரையாவது பார்க்க வேண்டாம் என்று தடுக்க முடியுமா? அப்பலோ நிர்வாகத்திடம் கேளுங்கள்.

பதவிக்காக சசிகலா காலில் விழுந்த கூட்டம் இன்று குற்றம் சாட்டுகிறது. அன்று முதல்- அமைச்சர் பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை கேட்பதை விட்டு விட்டு எங்களை கேட்பது முதல் தவறு. ஜெயலலிதாவை பார்க்க வருபவர்களை சசிகலா தடுத்தார் என்று அப்பலோ நிர்வாகம் சொல்லியதா? ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தலைமைச் செயலாளர் அங்கேயே தங்கியிருந்தார். ஜெயலலிதாவின் சிகிச்சை படத்தை வெளியிட வேண்டிய கடமை அவருக்கு உண்டு. ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை வீடியோ ஆதாரத்துக்கு எடுத்தது அல்ல. உடல்நிலை சரியான பிறகு தன்னை ஜெயலலிதா பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக சசிகலா எடுத்த வீடியோ. ஜெயலலிதா விருப்பப்பட்டதற்காக எடுத்த வீடியோ. உறவை-நட்பை மதிப்பவர் சசிகலா. எந்த ஒரு அவப் பெயர் வந்தாலும் பரவாயில்லை.

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட மாட்டேன் என்று சசிகலா கூறினார். சிகிச்சையில் தவறே நடக்காததால் தான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம். ஜெயலலிதா விரும்பாததை வீடியோவாக காண்பித்தால் அது அவருக்கு செய்த துரோகம். அப்படி வீடியோ காண்பித்து ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. நட்புக்கு இலக்கணமாக இருப்பதே சசிகலாவின் விருப்பம். வீடியோவை எங்கே கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுப்போம். அம்மாவின் மரணத்தை கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்