வலிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான கண்காணிப்பாளர்கள் அரசியல் கைதிகளை பார்வையிட வேண்டும்!

அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய ஊடக சந்திப்பினில் இதுபற்றி மேலும் தெரிவிக்கையினில் தங்கள் வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் தங்கள் வழக்குகள் அனுராபுரத்திற்கு மாற்றப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்தே மதியரசன் சுலக்ஸன்,இராசதுரை திருவரன்,கணேசன் தர்சனன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும் தங்கள் போராட்டத்தினை மீண்டும் ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையினில் உண்ணாவிரதத்தினில் குதித்துள்ள அரசியல் கைதிகளை சிங்கள மரணதண்டனை கைதிகளது பிரிவிற்கு சிறை அதிகாரிகள் அச்சுறுத்தி மாற்றியுள்ளனர்.இதுவரையும் தமிழ் அரசியல்கைதிகளுடன் இருந்தவர்களையே இவ்வாறு மாற்றஞ்செய்து அவர்களை கொலை செய்ய சதித்திட்டம் வகுக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உண்ணாவிரதப்போராட்டத்தினில் குதித்துள்ள அவர்களது பாதுகாப்பு தொடர்பினில் இலங்கை அரசு அக்கறை செலுத்தவேண்டும்.சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இவ்விடயத்தினில் விரைந்து செயற்படவும் வேண்டும்.இலங்கை வரும் வலிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான கண்காணிப்பாளர்கள் இவர்களினை பார்வையிடவேண்டும்.

2015 ஆட்சிபீடமேறிய இந்த அரசு திட்டமிட்டு தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தினில் சர்வதேசத்தை ஏமாற்றிவருகின்றது.

ஏற்கனவே கடந்த 22ம் திகதி ஜநாவினில் எமது கட்சி தலைமை இதனை அம்பலப்படுத்தியுள்ளது.சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களை தண்டிக்க அரசு முற்படுவதாகவும் செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்