நம்பிக்கை இழந்தாரா கூட்டமைப்பின் தலைவர்…? நரேன்

புதிய அரசியல் யாப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படும். அதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு உள்ளடக்கப்படும் பட்சத்திலேயே கூட்டமைப்பினுடைய ஆதரவு புதிய அரசியலமைப்புக்கு கிடைக்கும் என்றும், அந்த கருமத்தை நிறைவேற்றுவதற்காகவே நாம் எதிர்கட்சித் தலைவர் பதவியையும், வழிநடத்தல் குழுவின் அங்கத்துவத்தையும் ஏற்றுள்ளோம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையுடன் 19 ஆவது திருத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.

கடந்த வாரம் புதன்கிழமை 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்கட்சித் தலைவர் தமது ஆதரவை வழங்கியிருந்தார். ஒரு புதிய அரசியல் யாப்பைத் தவிர்ந்த வேறு எதற்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் மேற்சொன்ன இரண்டு திருத்தங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் தனது உறுதிப்பாட்டை இழந்து விட்டார் என்பது புலனாகின்றது. இந்த அரசாங்கம் உருவானது தொடக்கம் இன்று வரை திரு சம்மந்தனது பங்களிப்பு என்பது மிகவும் காத்திரமானதும், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்ததுமான செயற்பாடு ஆகும். இந்த அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவைக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான குரலை நியாயமாக எடுத்துச் சொல்லி, அனைத்து தரப்பினரதும் ஆதரவை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் சம்மந்தரின் இராஜதந்திரம் தோற்று விட்டதாகவே தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலில் நீண்டகாலத்திற்கு பிறகு 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆசனங்களைக் கொண்டு உரிய வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பதுடன், இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலுக்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடே அரசியல் தீர்வு வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். நாம் நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது என்று கூட்டமைப்பின் தலைவர் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக சொல்லியிருக்கிறார். இதற்கு முன்னர் 2016 இற்குள் தீர்வு கிடைத்து விடும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிய தலைவருக்கு இன்று எத்தகைய உத்தரவாதத்தையும் கொடுக்க முடியவில்லை. மேலும் நிதானமாக செயற்பட வேண்டும் என்று அறிவுறத்தலும் செய்கிறார். யாரை நிதானமாக இருக்கச் சொல்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தலைமையை நம்பி பயனில்லை என்று கருதிய நிலையில் தமது பிரச்சனைகளை தாமே கையில் எடுத்துக் கொண்டு சுமார் 8 மாதங்களாக எவ்வித சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடாமல் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு போராடுகின்றார்கள். உரிமைக்காவும், நீதிகாகவும் மக்கள் கடைப்பிடிக்கும் இந்த நிதானத்தை விட வேறு எப்படி நிதானத்தை கடைப்பிடிப்பது என்று தெரியவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் சென்று மண்டியிட்டு தன்னை காப்பாற்றுமாறு கோருகிறது. அவசரப்பட வேண்டாம். பொருளாதார வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், 30 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது என்றும், இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் இறைஞ்சுகிறது. பாதிக்கபட்பட்ட மக்களின் பிரதிநிதிகாக மட்டுமன்றி அரசாங்கத்தின் வழிநடத்தல் குழுவிலும் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற கூட்டமைப்பின் தலைவர் அந்த மக்களின் பிரச்சனைகளை வினைத்திறனுடன் சர்வ மட்டத்திலும், ஐ.நாவிலும் முன்வைத்தாரா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவான இந்த மைத்திரி -ரணில் அரசாங்கம் நினைத்திருந்தால் கடந்த இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பின் மூலமாக இனப்பிரச்சனை உள்ளிட்ட சகல பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கண்டிருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காகவும், சிங்கள மக்களின் மனோநிலையை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக வைத்திருப்பதற்காகவும், அரசாங்கம் போலி வேடமிட்டு பல முகங்களை காட்டுகிறது. அரசாங்கத்தின் இந்த நடிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் துணை போயிருப்பது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கூனிக் குறுக வைத்துள்ளது. ஒரு வீரம் செறிந்த உரிமைக்கான போராட்டம் பயங்கரவாததத்திற்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அரசியல் உரிமைக்கான தமிழ் தேசிய இனத்தினது போராட்டமானது தொழிற்சங்க போராட்டமாக தரம் தாழ்ந்து இருக்கின்றது.

இறைமையைப் பங்கிட்டு அதனடிப்படையில் சகல தேசிய இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு மேலும் போராட வேண்டும் என்ற நிலைக்கு, இன்னும் சொல்லப்போனால் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்களுக்கு அதன் தலைமையினாலேயே அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை காலமும் சம்பள உயர்வு மற்றும் அடிப்படை தேவைகள் போன்றவற்றை முன்னிறுத்தி தொழிற்சங்க ரீதியாக போராடி வந்த மலையக சமூகம் இன்று அரசியல் உரிமைக்காக போராடத் தொடங்கியுள்ளது. வடக்கு -கிழக்கு தலைமையைப் பொறுத்த வரையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் தேசிய இனம் பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக களம் புகுந்தது. அதற்கு வித்திட்ட மிதவாத தலைவர்களே இன்று அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்வது எந்தவகையில் நியாயம்.

ஒவ்வொரு மேடையிலும் எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நான் கேட்கவில்லை. எமக்கு உரியதை யாரும் தட்டிக் பறிக்க முடியாது. யாருக்கும் நிராகரிக்கும் உரித்துக் கிடையாது என்றெல்லாம் வீரவசனம் பேசிய இன்றைய எதிர்கட்சித் தலைவர் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் நிதானமாக இருக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது.

தமிழ் தேசிய இனம் கடந்த மூன்று தசாப்த காலப் பகுதியில் தமது உரிமைக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது. பல இளைஞர், யுவதிகள் இந்தப் புனிதமான உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். அந்த தியாகங்கள் வீண் போகாத வகையில் இன்றைய தலைமைகள் செயற்பட வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் மிதவாத தலைமைகள் வாக்கைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதியுச்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று கருதிய இளைஞர்கள் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், சாத்வீக போராட்டங்களை அரசாங்கம் ஆயுதம் கொண்டு நசுக்கியதன் காரணமாகவும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்களுடைய போராட்டத்தில் நேர்மையும், அர்ப்பணிப்பும், மிகுந்திருந்தது. அந்த வழியில் வந்த இன்றைய தலைவர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகளுக்கு துணை போவது மிகவும் வேதனையான விடயம்.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டிக்காமல் அல்லது கூட்டமைப்பின் பெயரால் அந்தக் கட்சி தமிழர்களுக்கு இழைக்கின்ற பாதகங்களை கணடடு கொள்ளாமல் இருப்பது என்பது இவர்களெல்லாம் தமது தைரியத்தை இழந்து விட்டார்களோ என்றும், அந்த பற்றுதியில் இருந்தும், அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அபிலாசையில் இருந்தும் விலகிச சென்று விட்டனரோ என்றும் சிந்திக்க தூண்டுகிறது.

அரசியல் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய ஒரு இக்காட்டான சூழலில் தமிழ் மக்களை காப்பாற்ற பரந்துபட்ட ஒரு பொது அமைப்பின் ஊடாக கட்டுப்பாட்டுடனும், வினைத்திறன் மிக்க வகையிலும் அரசியல் உரிமைக் கோரிக்கைகைளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து தமிழ் தலைமைகளும் ஓரணியில் திரளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்