அரசியல் கைதிகள் விடையத்தில் கூட்டமைப்பு துரிதமாக செயற்படவேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விசாரணையில் இருந்த தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் இருவர், உடல் நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையை அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றதென குறிப்பிட்டுள்ள அருட்தந்தை, அவர்களை விடுவிப்பதே நல்லிணக்கத்திற்கு வித்திடுவதாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதும், அரசாங்கம் அவற்றை கண்டுகொள்வதாக இல்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு இதுகுறித்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்