நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம் – பரணி கிருஷ்ணரஜனி

‘நந்திக்கடல்’ . இது ஒரு நிலத்தின் பெயரல்ல..தமிழர் மீளெழுச்சியின் ஒட்டுமொத்த அடையாளம்.அடங்க மறுக்கும் ஒரு இனத்தின் குறியீட்டு பெயர். போராடும் இனங்களின் நவீன நம்பிக்கை சொல். ‘பிரபாகரனியத்தை’ உட்செரித்த ஒரு இனத்தின் உலகளாவிய போர்க்குரல்.
உலக பயங்கரவாத அரசுகள் அதை தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான விடுதலைக்கோட்பாடு பிரசவிக்கப்பட்ட இந்த நூறறாண்டின் தாய்ச் சமர்ககளம்.
பற்றைகளும், புற்களும், சேறும், சகதியும் நிறைந்த ஒரு நிலப்பரப்பு ஒரு வரலாற்று நாயகனை ‘உள்வாங்கி’ ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டை வெளித்தள்ளியது.
போராடும் இனங்களுக்கான படிப்பினையும் பாடமும் மட்டுமல்ல வழிகாட்டியுமாக உலக ஒழுங்குக்கு சவாலாக அச்சமாக எல்லாமுமாக அது அந்த மண்ணிலிருந்து வெளித்ள்ளபப்ட்டது.
வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது…

அரச பயங்கரவாதத்திற்கெதிரான விடுதலைப் போராட்டம், புரட்சிகர வன்முறை, மக்கள் போராட்டம் குறித்த எந்த வித புரிதலுமின்றி ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்களை பயங்கரவாத அரசுகள் ‘சர்வதேச உறவுகள்’, ‘பிராந்திய பூகோள நலன்கள்’ என்ற வகைமைக்குள் பொருத்தி எப்படி அழித்தொழித்து வருகின்றன என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் எமக்குள்ளிருந்தே புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு இருக்கிறது. ஆனால் அதை ‘நந்திக்கடல்’ தர்க்க நியாயங்களுடன் மறுதலிப்பது மட்டுமல்ல ஒரு உலாகளாவிய கோட்பாடாகவும் முன்வைக்கிறது.
போராடும் இனங்களையும் அவர்களின் போராட்ட பிரதிநிதிகளையும் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்து நிறையவே எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.
ஒரு வரலாற்று நாயகனின் சாட்சியாக – உளவியலாக இறுதிக் காலங்களில் மக்களுக்கும் புலிகளுக்கும்; இடையில் நிகழ்ந்த ஊடாட்டத்தை அறம் சார்ந்து விபரிப்பது மட்டுமல்ல, ‘மனிதக் கேடயம்’ என்ற பயங்கரவாத அரசுகளின் அயோக்கிய சொல்லாடலான அறம் மீறிய இராணுவ தந்திரோபாயத்தையும் அம்பலப்படுத்துகிறது ‘நந்திக்கடல்’.
இதன் வழி தமிழினத்திற்கான விடுதலைச் சூத்திரத்தை மட்டுமல்ல உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்து வரலாற்றில் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது ‘நந்திக்கடல்’.

‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ என்றவுடன் அது இராணுவ, அரசியல் பரிமாணங்களை மட்டும் உள்ளடக்குவதாக சிலர் கருதுகிறார்கள்.
தேசிய இனங்களை முன் வைத்து, இன அழிப்பு பின் புலத்தில் அது தனி மனித வாழ்வு குறித்து பேசுகிறது. ஆண்- பெண் உறவு, குடும்ப அமைப்பு குறித்து அக்கறை கொள்கிறது.
கலை,பண்பாட்டு அடையாளங்கள் பேணப்படுவது குறித்து கரிசனை கொள்கிறது.
தொன்மங்கள்,மரபுகள் மீட்டெடுப்பது குறித்த அறைகூவல் விடுக்கிறது.
இப்படி நிறைய அடுக்கலாம்.
இதன் ஒட்டுமொத்த திரட்சியே அந்த தேசிய இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும் என்பதுடன் அந்த இனம் நீடீத்து நிலைத்து நிற்கவும் உதவும் என்கிறது ‘ நந்திக்கடல்’

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலங்களையும் துண்டாடுகிறது.
ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் பன்முக
அரசியலையும் முன்மொழிகின்றன.
பிரபாகரன் முள்ளிவாய்க்காலை விட்டு நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.
இது புரியாமல் நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம்.
நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது.
எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.

இந்த உலக ஒழுங்கின் பிரகாரம் உலக பயங்கரவாத அரசுகளின் துணையுடன் பெரும் மனித பேரழிவுடன் முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு நடந்தபோதே மறுவளமாக இந்த உலக ஒழுங்கு இன்னும் வீங்கிப் பெருத்து உடைப்புக்கு உள்ளாகும் என்று ‘நந்திக்கடல’ எதிர்வு கூறுகிறது.
இது போன்ற பல உலகளாவிய அழிவுகளின் பக்க விளைவே நரேந்திரமோடி, டெனால்ட் ட்ரம்ப் வருகை தொடக்கம் தற்போதைய வடகொரிய பதட்டம் வரை அடுக்கலாம். விளைவாக ஒரு கட்டத்தில் இந்த உலக ஒழுங்கு பெரும் அனர்த்தங்களுடன் தளம்பலைச் சந்திக்கும் என்றும் ‘நந்திக்கடல்’ கணிக்கிறது.
அப்போது உலகின் போராடும் இனங்கள் விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து கைகோர்கும் போது இந்த உலக ஒழுங்கை முற்றாகவே நிர்மூலம் செய்து மக்கள் சார் புதிய உலக ஒழுங்கை உருவாக்கலாம் என்றும் அறைகூவல் விடுக்கிறது ‘நந்திக்கடல்’..
இன்றைய நரேந்திரமோடி, டெனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் உலக ஒழுங்கு அவர்களது அரசுகளைத் தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புக்கள; வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கு.
அதனால்தான் ‘பிரபாகரனியத்தின்’ மைய சரடான ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ இந்த பெரு முதலாளிகளின் உலக ஒழுங்கு குறித்து நிறையவே எச்சரிக்கிறது.
விளைவாக ‘நந்திக்கடல்’ நேரடியாக அரசுகளைத் தாக்குவதைவிட அதைத் தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்வது குறித்தே அதிகம் உரையாடுகிறது.
‘பிரபாகரனியத்தின்’ நந்திக்கடல் கோட்பாட்டின் மையமான குறிக்கோள் அரசுகளை நேரடியாகத் தாக்குவது அல்ல. மாறாக அதன் நுட்பத்தை அதன் வடிவத்தைத் தாக்குவதாகும்.
இந்த நிர்மூலமே ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகிக்கும் என்கிறது.
தற்போது உலகெங்கும் நடக்கும் மாற்றங்கள் ‘நந்திக்கடல்’ எதிர்வு கூறலின் பிரகாரம், தற்போதைய நவீன உலக ஒழுங்கு வீங்கிப் பெருத்து சுய உடைவுக்கு தயாராகிக் கொண்டிருப்பதை கட்டியம் கூறுகின்றன.
எனவே உலகெங்கும் போராடும் இனங்கள் தம்மை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய தருணம் இது.
எந்த நேரமும் ஒரு உலகளாவிய புரட்சி வெடிக்கலாம்.
அப்போது ‘பிரபாகரனியம்’ என்ற நவீன விடுதலைக் கோட்பாடு அந்த புரட்சியை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

நாம் வாழும் பூமிப்பந்து முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டதுதான்.
மனித உடலின் பெரும் பகுதி கூட நீரால் ஆனதுதான்.
எண்ணெய்க்கான புவிசார் அரசியல் ஓய்ந்து தண்ணீர் (கடல்) அரசியலுக்குள் நவீன உலகம் பிரவேசித்திருக்கிறது.
மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட தமிழீழத்தின் சூழமைவு,கேந்திர முக்கியத்துவம், அரசியல் எல்லாமுமே தண்ணீர்தான்.
இன்னொரு தமிழர் நிலமான தமிழகத்தை தமிழீழத்தோடு இணைப்பது கூட அதே தண்ணீர்தான்.
இந்த உளவியல், அரசியல், விஞ்ஞானம்,இயங்கியல் எல்லாவற்றினதும் கூட்டியக்கமாகவே பிரபாகரன் ‘நந்திக்கடல்’நோக்கி நடந்தார்.
அந்த வரலாற்று நாயகனை உள்வாங்க முடியுமா என்ற அச்சத்தின் – சந்தேகத்தின் காரணமாக நந்திக்கடல் அந்த இரவில் தகித்து போயிருந்தது.
ஒரு கட்டத்தில் சுதாரித்து மனித குல வரலாற்றின் அதி நவீன கோட்பாட்டை, உலக பயங்கரவாத அரசுகளிடமிருந்து போராடும் இனங்கள் விடுதலையடையும் சூட்சுமத்தை உலகிற்கு அறிவிக்கும் தனது பணியின் கனதியை உணர்ந்து ‘அவரை’ மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொண்டது.
யாராலும் இம்மியளவு கூட கணிக்க முடியாத ஒரு அதி மனிதனின் உளவியலை ஒரு நீர்ப்பரப்பு பிரதியெடுத்த கதை இது.
இதன் வழி வரலாற்றில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்டது ‘நந்திக்கடல்’.

‘நந்திக்கடலின்’ H2O கோட்பாடு.
நேரடி இன அழிப்புக்குள்ளான ஒரு இனக் குழுமம் தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் இருக்கும்போது அந்த இனக் குழுமத்திடமிருந்து ஐந்து வகையான அரசியல் உற்பத்தியாகும் என்கிறது ‘நந்திக்கடல்’.
அழிவு அரசியல், அவல அரசியல், அடிபணிவு அரசியல், ஒப்படைவு அரசியல், சரணாகதி அரசியல் என்பவையே அவையாகும்.
சம காலத்தில் இன அழிப்பு அரசு இரு வகையான அரசியலை கையிலெடுக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.
மேற்படி இனக் குழுமத்தின் இதுவரை கால அடையாளத்தையும், இருப்பையும், அரசியலையும் நிர்மூலம் செய்யும் நீக்க அரசியல், மற்றும் நினைவு அழிப்பு அரசியல் என்பவையே அவையாகும்.
தமக்குள்ளிருந்து உற்பத்தியாகும் மேற்படி தளம்பல் அரசியலையும், எதிரிகளால் உட் செருகப்படும் நுணுக்க அரசியலையும் இரு துருவமாக எதிர் கொள்ளும் ஒரு இனக் குழுமம் அதை முறியடித்து ஒரு ‘ எதிர்ப்பு’ அரசியல் வடிவத்தை கட்டியெழுப்பத் தவறினால் அந்த இனம் முற்றாக அழிந்து போவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எச்சரிக்கிறது ‘ நந்திக்கடல்’.
இந்த இடத்தில்தான் ‘ நந்திக்கடல்’ மேற்படி நிலையிலிருந்து இனக் குழுமங்கள் மீண்டு வர ஏதுவான H2O கோட்பாட்டை அறிமுகம் செய்கிறது.
H2O என்பது தண்ணீரின் இரசாயனப் பெயர். தண்ணீர் தனித்தும் வேறு மூலக் கூறுகளுடனும் இணையும் போது நிகழும் பல்வேறு இரசாயன, பெளதீக மாற்றங்களை குறியீடாக்கி போராடும் இனங்கள் தனித்தும், பல்வேறு வேறுபட்ட அரசியல் நிலைகளோடு பொருதும் போது நிகழும் மாற்றங்களை முன் வைத்து இந்த தற்காப்பு கோட்பாடை அறிமுகம் செய்கிறது ‘நந்திக்கடல்’.
இந்த கோட்பாட்டின் மைய உள்ளடக்கம், தோல்வி மற்றும் அவல மனநிலையிலிருந்து போராடும் இனங்களை மீட்டெடுத்து அவர்களை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டு வருவதுதான்.
பின்பு எதிர் கொள்ளல், தற்காத்தல், ஒருங்கிணைதல், ஊடுருவுதல், தாக்குதல், அழித்தொழிப்பு செய்தல் என்று அதை நீட்டிச் செல்கிறது H2O கோட்பாடு.
வெளித் தோற்றத்தில் இராணுவ சொல்லாடல்களை போல் தோற்றமளிக்கும் இக் கோட்பாட்டின் உள்ளடக்கம் அடிப்படையில் போராடும் இனங்கள் துப்பாக்கியின்றி, இரத்தம் சிந்தாது இன அழிப்பு எந்திரத்தை எதிர் கொள்ளும் சூட்சுமங்களையே வடிவமக்கிறது.

தண்ணீருக்கும் புலிகளுக்குமான உளவியல் சுவாரசியமானது. அது ஒரு magic ம் கூட.
புலிகள் வீழ்ந்து போனதாக கணிக்கப்பட்ட போதெல்லாம் அவர்கள் எழுந்து வந்து தாக்கிய போது அது ‘ஓயாத அலைகள்’ என்றே அழைக்கப்பட்டது.
ஏனோ தெரியவில்லை தண்ணீரைத்தான் தமது அடங்காமையின், பண்பின் குறியீடாக்கினார்கள் புலிகள்.
இன்று ‘நந்திக்கடல்’ இலும் இயல்பாகவே அந்த magic நடந்திருக்கிறது.
புலிகளின் கடைசி வியூகத்தை ஒரு நீர்ப்பரப்பு வகுப்பதும், அது ‘தண்ணீர் கோட்பாடு’ என்று வரலாற்றில் பதிவாவதும் magic தானே..!
அலைக் கோட்பாடு, மிதத்தல் கோட்பாடு, நீச்சல் கோட்பாடு, சுழித்தல் கோட்பாடு என்று வகுக்கும் ‘ தண்ணீர்’ கோட்பாட்டின் இறுதி சக்கர வியூகத்தை ‘ஓயாத அலைகள்’ என்றே பெயரிட்டு அழைக்கிறது ‘நந்திக்கடல்’.
வரலாறு எவ்வளவு அற்புதமானது.!

இன அழிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனக் குழுமம் அரச தரப்பிலிருந்து தம் மீது திணிக்கப்படும் ஐந்து வகையான சொல்லாடல்கள் குறித்த அதிக கவனத்தை கோருகிறது ‘ நந்திக்கடல்’.
அவையாவன
மறுவாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, இன ஐக்கியம். நல்லிணக்கம் என்பவையாகும்.
வெளித்தோற்றத்தில் அழிவுற்றுக் கொண்டிருக்கும் இனத்தின் ஊனமுற்ற உளவியலுக்கு நெருக்கமானதாக – பகட்டாகக் காட்சியளிக்கும் இந்த சொல்லாடல்கள் உள்ளடக்கத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தை முற்றாக அரசியல் நீக்கம் செய்யவும் தொடர் இன அழிப்பிற்குள்ளாக்கவும் அரசு கையிலெடுக்கும் இன அழிப்பு மூலோபாயம் என்கிறது ‘நந்திக்கடல்’.
இதற்கு ஒத்தூதும் அல்லது இதன் மூலோபாய தந்திரத்தை உணராத உள்ளக சக்திகள் குறித்தும் எச்சரிக்கையை கோருகிறது ‘நந்திக்கடல்’.
தனது பண்புக்கு நிகராக ‘தண்ணீர்’ தத்துவத்தின் படி, போராடும் இனங்கள் இதை வெட்டியோடும், சுழித்தோடும் தந்திரங்களை அலைக் கோட்பாடு, மிதத்தல் கோட்பாடு, நீச்சல் கோட்பாடு மூலம் தற்காப்பு பொறிமுறைகளை முன் வைக்கிறது ‘ நந்திக்கடல்’.

நெல்சன் மண்டேலா – பிடல் கஸ்ரோ – வேலுப்பிள்ளை பிரபாகரன்.

மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”.
மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது.
பிரபாகரனை ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே இருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலக ஒழுங்கையே மாற்ற முற்பட்டார். அவர் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடவில்லை.
கஸ்ரோவும் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடாமல் ஒரு சர்வதேசிய கருத்தியலை உருவாக்கினார்.
ஆனால். கஸ்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற உள் மடிந்த கருத்தியல் ‘சிறிய அரசுகளை காப்பாற்றுகிறோம்’ என்ற போர்வையில் போராடும் இனங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக உருத்திரண்டு அரச பயங்கரவாதத்திற்கு ஊன்று கோலாக மாறிய அவலம் நடந்தேறியது. தமிழீழம் அதற்கான சமகால சாட்சி.
இங்கேதான் ‘நந்திக்கடல்’ மிக முக்கியமான புள்ளியை வந்தடைகிறது.
மண்டேலாவின், கஸ்ரோவின் (இவர்கள் மட்டுமல்ல போராடும் இனங்கள் தொடர்பான பல உலகளாவிய தத்துவங்கள்) கொள்கை – கோட்பாட்டு சரிவு நந்திக்கடலில் வைத்து ‘பிரபாகரனியம்’ எனும் ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கான வெளியை திறந்து வைக்கிறது.
இந்த அடிப்படையில்தான் மண்டேலா, பிடல்கஸ்ரோ, கோசிமின், யாசீர் அரபாத் போன்ற புரட்சியாளர்கள் வரிசையில் பிரபாகரன் தனித்துவமானவராகிறார்.

சோவியத் உடைந்த போது,பெர்லின் சுவர் தகர்ந்த போது,இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது.
இதை முன் வைத்து Francis fukuyama போன்ற கோட்பாட்டாளர்கள் வரலாற்றுக்கு முடிவுரை எழுதக்கூடப் புகுந்தார்கள்.
ஆனால் 2009 மே 17 நள்ளிரவில், ஒரு சிறிய நீர்ப்பரப்பை மட்டும் சாட்சியாக வைத்து இதுவரை கால மனித குல வரலாற்றை அசைத்து பார்க்கும் ஒரு பிரளயம் நடந்தேறியது உலகின் கண்களுக்கு தெரியாமலே போனது.
நவீன மனித குல வரலாற்றை உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான வரலாறாக மாற்றி எழுதிய
இந்த நூறறாண்டின் தாய்ச் சமர்ககளம் அது.
வரலாற்றின் அதி உச்ச நிகழ்வு அது.
காலங் கடந்து உலக வரலாற்றாசிரியர்களுக்கு, தத்துவவாதிகளுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு தீனி போடக் காத்துக் கிடக்கிறது அந்த நீர்ப்பரப்பு.

‘நந்திக்கடல்” போராடும் இனங்கள் தொடர்பான உலகளாவிய தத்துவங்களை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது.
மார்க்சிசம், கொம்னியுசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்பு பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது.
உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த நாடுகளின் கருத்தாங்கங்களையும் அதன்வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து ‘நந்திக்கடல்’ பல கேள்விகளை உற்பத்தி செய்வதுடன் இவை தொடர்பான ஒரு மறு விசாரணையையும் கோருகிறது.
இதுவே ‘பிரபாகரனியம்’ என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் விரிகிறது.

மற்றவர்கள் இயற்கையானது எனப் பார்த்தவற்றில் பிரபாகரன் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்.
அதுதான் எல்லோரும் முள்ளிவாய்க்காலில் கவனத்தைக் குவிக்க அவர் நந்திக்கடல் நோக்கி நடந்தார்.
பிரபாகரனியம் ‘தோல்வி’ என்ற சொல்லாடலை நிராகரிக்கிறது.
போராடும் இனங்களின் ‘தோல்வி’ குறித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் அது தோல்வியல்ல என்கிறது. அதை ‘பின்னடைவு’ என்றே வர்ணிக்கிறது.
அதையும் ஒரு கட்டத்தில் நிராகரித்து ‘பின்நகர்வு’ என்று ஒரு கோட்பாட்டு வரையறைக்குள் கொண்டு வருகிறது.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின், ஒரு போராடும் இனத்தின் அகராதியில் ‘தோல்வி’ என்ற சொல்லாடல் ஒருபோதும் இருக்கமுடியாது என்று ‘நந்திக்கடல்’ அடித்து கூறுகிறது.

இன அழிப்பின் பின்னான போராளிகள் – மக்கள் உளவியல்.
‘நந்திக்கடல்’ என்ன சொல்கிறது?
பேரழிவைச் சந்தித்த இனம் ஒன்று மீளிணைதல் அல்லது ஒருங்கிணைதல் என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் போராட்ட சக்திகளான போராளிகளுக்கும்; மக்களிற்கும் இடையிலான உளவியலை சீர்படுத்தல் என்பதிலிருந்தே தொடங்குகிறது என்கிறது ‘நந்திக்கடல்’
மாண்டவர்கள் போக, சிறைப்பிடிக்கப்பட்டு இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முடமாக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் சமூகத்திற்குள் களமிறக்கப்பட்ட போராளிகள் ஒரு புறமும், தோல்வி மற்றும் அழிவைச் சந்தித்து அதன் விளைவான அவலத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் மறு புறம் என்று இரு தொகுதிகளுக்கும் இடையில் ஒரு ஒவ்வாமை உருவாகும் என்கிறது ‘நந்திக்கடல்’.
போராளிகளின் இந்த ஊனமுற்ற உளவியல் கடந்த கால போராட்டத்தின் மீதான வெறுப்பாக – போராட்டத்தை முன்னெடுத்த சக போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசைபாடல்களாக, காட்டிக்கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக, எதுவுமே பேச முடியாத மௌனமாக என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் என்பதை ‘நந்திக்கடல்’ எதிர்வு கூறுகிறது.
இன்று சமூகத்தில் நாம் காணும் போராளிகள் அனைவரும் இதன் ஒட்டு மொத்த குறியீடுகளாக நம் முன் இரத்த சாட்சியங்களாக உலா வருகிறார்கள்.
அத்துடன் இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ள மக்களின் உளவியலும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது.
பசியும், பஞ்சமும், கலாச்சார சீர்கேடுகளும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலைக்கான காரணத்தை தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாகவும் அந்த கனவை தாங்கிய போராளிகள் மீதான வெறுப்பாகவும் மக்கள் கண்டடையும் வண்ணம் அவர்களின் உளவியல் ஊனப்படுத்தப்படுகிறது.

துரதிஸ்டவசமாக மக்களும் இதை நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்பதை வேதனையுடனும் எச்சரிக்கையுடனும் நம் முன் வைக்கிறது ‘நந்திக்கடல’.;
விளைவாக சமூகத்தில் புதிய அடையாளங்களுடன் பேதலித்த உளவியலுடன் உலாவரும் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகிறது.

ஒரு கட்டத்தில் தமது ஊனப்பட்ட உளவியலை இருதரப்பும் விரித்தும் பிரித்தும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
முடிவாக வசைபாடல்களும் பறக்கணிப்பும் பல்வேறு வடிவங்களாக வெளித்தளப்படுகின்றன. இதை இனஅழிப்பு அரசும் அதன் அடிவருடிகளும் அறுவடை செய்வார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’..
இன்று அதன் சாட்சியங்களாக – எச்சங்களாக நாம் இருக்கிறோம்.
எனவே மக்களிற்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவை சீர் செய்தல், ஆற்றுப்படுத்தல் என்பவற்றினூடாகத்தான் நாம் ஒரு இனமாக மீளிணைதலின் சாத்தியம் உருவாக முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.
தண்ணீர் கோட்பாட்டின் அடிப்டையில் இந்த உறவுப் படிநிலைகளை பல பரிமாணங்களில் முன் வைக்கிறது ‘நந்திக்கடல்’.

போராடும் தேசிய இனங்கள் வெளித்தரப்பை அணுக – கையாள தற்காலிகமாகவேனும் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ‘நந்திக்கடல்’.
தண்ணீர் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சூழமைவுக்கு ஏற்ப
அப்போதுதான் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ளவும் முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.
எத்தகைய வீழ்ச்சியையும் அழிவையும் சந்தித்த எந்த இனத்திற்கும் ஏதோவொரு பலம் அதைச் சூழ இயங்கிக் கொண்டிருக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.
இந்த அடிப்படையில் நமது பலம் தமிழகம்.
இந்த அடிப்படையில்
தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை இரு தமிழர் நிலமும் இணைந்து உருவாக்குவதனூடாக
அப்படியான ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கி நாம் நமது அரசியலை தீர்மானிக்காவிட்டால் இப்படி பிராந்திய – புவிசார் அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான் என்று எச்சரிக்கிறது ‘நந்திக்கடல் “.

அரச எந்திரத்தின் – அதை தாங்கும் பெரு முதலாளிகளின், நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத பல உதிரிகள் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பார்கள்.
அவர்கள் முற்போக்கு முகமூடியுடன் அலைந்து கொண்டிருப்பார்கள்.
சமீபத்திய உதாரணம், ஜல்லிக்கட்டு.
உயிர்வதை, நாகரிக உலகில் காட்டுமிராண்டித்தனம், ஆணாதிக்கம் என்று பல வழிகளில் சமூகத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக வாளை வீசினார்கள்.
மாணவர்கள், பெண்கள் உட்பட முழு இனக் குழுமமும் தமது தொன்மத்தின் மீது, மரபின் மீது ஒரு யுத்தம் திணிக்கப்பட்டதை உணர்ந்து கூட்டு உளவியல் திரட்டாக அணியமானபோதே இந்த போலிகள் பின்னடைய நேரிட்டது.
‘நந்திக்கடல்’ இத்தகைய உதிரிகள் குறித்து சம்பந்தப்பட்ட இனகுழுமத்திடம் மிகுந்த எச்சரிக்கையை கோருகிறது.
தேசிய இனங்களின் பண்பாட்டு கூறுகள், பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னே அந்த இனக் குழு மங்களின் தொன்மமும் மரபும் தொடர்ந்து பேணப்படுவது மட்டுமல்ல இன அழிப்பிற்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் என்பதையும் ‘நந்திக்கடல்’ அறிவுறுத்துகிறது.

சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங் கிணக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது ‘நந்திக்கடல்’.
போரடும் இனங்கள் களச் சூழலுக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவங்களை மாற்றலாமேயொழிய என்றும் போராட்ட பண்பை இழக்கக் கூடாது என்கிறது ‘நந்திக்கடல்’
அந்தப் பண்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நிரந்தர தோல்வியை பரிசளிக்கும் போராடும் இனங்களின் மூலதனம் என்கிறது ‘நந்திக்கடல்’.
அத்தோடு,ஒரு போராடும் இனமாக எமது விடுதலையின் இராணுவ மூலோபாயத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இன்று முழுமையாகவே நிலத்தை பறிகொடுத்துவிட்ட நிலையில் ‘நந்திக்கடல்’ இந்த இராணுவ மூலோபாய சிந்தனைகளை வேறு வழிகளில் அறிமுகம் செய்கிறது.
முழுமையாக நிலங்களை பறிகொடுத்து நகர்ப் புறங்கள், கிராமங்கள், சாலைகள் மீதான எமது பிடிமானத்தை இழந்தாலும் அடாந்த காடுகள், களப்புக்கள், வாவிகள், கடலோரங்கள் மீது ஒரு தொடர்சியை பேண வேண்டும் என்கிறது ‘நந்திக்கடல்’
இன அழிப்புப் பின்புலத்தில் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் இராணுவ – அரசியல் மூலோபாயமான இன அழிப்பு அரசின் இராணுவ, பொருண்மிய, கேந்திர மூலோபாயங்களை கேள்விக்குட்படுத்துதல், தற்காப்பு மக்கள் யுத்தம் என்ற அரசியல் இராணுவ தந்திரோபாயத்தை கட்டியெழுப்புதல், மக்கள் திரள் போராட்டம், பேராளிகளின் புரட்சிகர வன்முறை போராட்டம் என்பவை இந்த் தொடர்ச்சியைப் பேணுவதனூடாகவே நிலை நிறுத்தப்படும் என்கிறது ‘நந்திக்கடல்’ .
எனவே இன்றைய காடழிப்பு என்பது தூர நோக்கில் தமிழர்களின் இராணுவ மூலோபாய சிந்தனைகளைச் சிதைக்கும் கபட நோக்கம் கொண்டதும் கூட.
ஆனால் ‘நந்திக்கடல்’ இதையும் எதிர் கொள்ளும் பொறிமுறைகளை எழுதிவிட்டுத்தான் காத்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு களம் புகுந்து தம்மை ஆகுதியாக்கிய தெய்வீகள் தலைமையிலான போராளிகள் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் இராணுவ மூலோபாய சிந்தனைக்கு நெருக்கமான ஒரு உதாரணமாகும்.
‘கேப்பாபுலவு’ மக்கள் திரள் போராட்டத்திற்கு ஒரு செறிவான உதாரணமாகும்.
எனவே எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தோல்வி மனநிலையில் போராடும் இனங்களின் அடிப்படை மூலோபாயமான போராடும் பண்பை எந்த வழியிலும் இழந்து விடக்கூடாது என்று ‘நந்திக்கடல்’ எச்சரிக்கையுடன் அறிவுறுத்துகிறது.
போராடும் இனங்கள் எப்போதும் தம்மை தண்ணீர் போல் வைத்திருக்க வேண்டும் என்கிறது ‘நந்திக்கடல்’.
அப்போதுதான் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ள முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.
தனது குணாம்சத்துடன் ஒப்பிட்டு இதை ‘தண்ணீர் கோட்பாடு’ (Water Theory) என்கிறது ‘நந்திக்கடல்’.

களத்திற்கு வெளியே, அனைத்துலக மட்டத்தில் கிடைக்கப்போகும் வெற்றியை விட மக்கள் போராட்டங்களை முடக்குவதனூடாகவே இனஅழிப்பு அரசு தனது வெற்றியை – இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
எனென்றால் சிங்களத்தைக்காக்க பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது.
ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் பேராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் எதிரிகளிடம் இல்லை.
அதுவும் ‘பிரபாகரனியத்தை’ உடசெரித்த ஒரு இனம் ஒன்றுபட்டு தம்மோடு பொருதுவதை அவர்களுக்கு என்றுமே தடுக்கும் வல்லமை கிடையாது.
சமகாலத்தில் களத்தில் யார் வெற்றியை தக்க வைக்கிறார்கள் என்பது பொறுத்தே அதன் அரசியல் வெற்றி இறுதிப்படுத்தப்படும்.
எனவே சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங் கிணக்கப்படுவதன் அவசியத்தை ‘நந்திக்கடல்’ வலியுறுத்துகிறது.
போரடும் இனங்கள் களச் சூழலுக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவத்தை மாற்றலாமேயொழிய என்றும் போராட்ட பண்பை இழக்கக் கூடாது என்கிறது ‘நந்திக்கடல்’
அந்தப் பண்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நிரந்தர தோல்வியை பரிசளிக்கும் போராடும் இனங்களின் மூலதனம் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ செய்தி.
முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த இனக் குழுமமாகக் கருதினால், அவர்கள் தமது பண்பாட்டு அடையாளங்களுடன் வாழும் உரிமையை ‘நந்திக்கடல்’ முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
உலகெங்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இனக் குழுமங்கள் எதிர் கொள்ளும் சிக்கலான நெருக்கடி இது.
போராடும் இனக் குழுமங்களிடையே தம்மை ஏதோ ஒரு வகையில் வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் உபரி குழுமங்களின் தனித்துவத்தை அரச பயங்கரவாதம் தமக்கு சார்பாக பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களினூடாக சம்பந்தப்பட்ட இரு குழுமங்களையும் வேறு பிரித்து தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.
ஆனால் முஸ்லிம்கள் இந்த புரிதலின்றி சக தேசிய இனம் மீது இன அழிப்பு அரசுடன் சேர்ந்து இயற்கை வளங்களையும் அழித்து நில ஆக்கிரமிப்பு செய்வதென்பது தமிழீழத்தில் தனித்த அடையாளங்களுடன் ஒரு இனக் குழுமமாக வாழும் முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.
இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இத்தகைய உபரி தேசிய இனங்களின் உரிமைகள் குறித்து ‘நந்திக்கடல்’ நிறையவே அக்கறை கொள்கிறது.
கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் – தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.
முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.
ஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

ஒரு போராடும் இனமாக கரும்புலிகளை கொண்டாடிய நாம், அவர்களது தியாகங்களை கோட்பாட்டுருவாக்கம் செய்யவில்லை – தத்துவப்படுத்தவில்லை.
உலக பயங்கரவாத அரசுகளின் லொபிக்குள் அவர்களது தியாகம் உள்மடிந்து எமது விடுதலை மடைமாறியதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.
‘ நந்திக்கடல்’ போராடும் இனங்கள் மீது விசனம் கொள்ளும் இடம் இது.
தியாகங்கள், அர்ப்பணிப்புக்களை கோட்பாட்டுருவாக்கம் செய்வதனூடாகத்தான் அதை அர்த்தமுள்ளதாக்குவதுடன், அரச
பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஊடறுத்து விடுதலையை நோக்கி நகர முடியும் என்கிறது ‘ நந்திக்கடல்’.
அரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களுடன், அதி நவீன விஞ்ஞான- தொழில்நுட்ப புலனாய்வு வலையமைப்புக்களுடன், நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புசார் சிந்தனை குழாம்களின் லொபிகளால் சுற்றி வளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போரட்டத்தில் உயிர்க்கொடை தவிர்க்க முடியாத ஒரு வகிபாகம் என்கிறது ‘ நந்திக்கடல்’.
வரலாற்றில் முதல் தடவையாக ‘ நந்திக்கடல்’ கரும்புலிகளை கோட்பாட்டுருவாக்கம் செய்கிறது.
பலவீனமான தேசிய இன்ங்களின் பலம் மிக்க இந்த அதி மனிதர்களை தத்துவப்படுத்தி மறு அறிமுகம் செய்கிறது ‘நந்திக்கடல்’

இன அழிப்புப் பின் புலத்தில், சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்று கூடுதல், ஒருங்கிணைதல் என்பது மிக முக்கியமானது என்கிறது ‘நந்திக்கடல்’.
இதனூடாக இன அழிப்புக்கு எதிரான அரசியல், பண்பாடு, பொருண்மியம் மற்றும் உளவியல் காரணிகளின் கூட்டுப் பெறுமானத்தை அந்த இனக் குழுமம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.
இன அழிப்பு பின் புலத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தின் ஐதீகங்கள் கூட இன அழிப்புக்கு எதிரான பெறுமானத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறது ‘நந்திக்கடல்’.
கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஒன்றிணைந்த எமது மக்கள் குழுமத்தின் திரட்சியை இந்த கூட்டுப் பெறுமானங்களின் பின்னணியில் வரையறுத்துக்கொள்ள முடியும்.
எனவே எமது ஒருங்கிணைவுதான் முக்கியம் – அங்கு பகுத்தறிவையும் மூட நம்பிக்கைகளையும் தேடாதீர்கள்.
அது இன அழிப்பு அரசிற்குத்தான் சாதகமான ஒரு கருத்தியலாக உருத் திரளுமேயொழிய பாதிக்கப்பட்ட இனக் குழுமத்தின் ஒன்றிணைதலுக்கு பாதகமான கருத்தோட்டமாக மாறி தொடர்ச்சியான இன அழிப்புக்குள் அந்த இனக் குழுமத்தை தள்ளும் என்று எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.
அத்துடன் தாயகத்திலுள்ள பெரிய ஆலயங்களை எமது தனித்துவ அடையாளங்களுடன் பேணும் அதே சமயம் சிறு தெய்வ வழிபாட்டை அழியாமல் பாதுகாப்பதுதான் இனஅழிப்பிலிருந்து நம்மை நிரந்தரமாகப் பாதுகாக்க உதவும்.
தமிழர் தாயகத்தில் வீதிக்கு வீதி புத்தர் சிலைகளை நிறுவும் சிங்களத்தின் நகர்வு இந்த சிறு தெய்வ வழிபாட்டை முடக்கும் இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவங்களில் ஒன்று.
அதாவது இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம், மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
எனவே தமிழ் தொன்மத்தை தொடர்ந்து பேணும் அதை மீட்டெடுக்கும் இந்த சிறுதெய்வ வழிபாட்டு முறையை தொடர்ந்து பேணுவோம்.
இது கடவுள் நம்பிக்கை அல்ல – நமது எதிர்ப்பு அரசியல் இது.
‘நந்திக்கடல்’ எல்லைகள் தாண்டி – தேசங்கள் தாண்டி இனக் குழுமங்களின் இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை ஒரு கோட்பாடாகவே முன்வைக்கிறது.

குற்றம் – வன்முறை – பயங்கரவாதம் – உ.ளவியல் – நந்திக்கடல்.
சில குறிப்புகள்.
தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்கிறது ‘ நந்திக்கடல்’.
குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதை யாரும்
கணக்கிலெடுப்பதில்லை.
உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை “Schizoid” என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள்.

இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.
இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே… இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.
குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் – குறிப்பாக அதன் அரசியல் பரிமாணங்களை வரையறை செய்கிறது ‘நந்திக்கடல்’.
நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு பார்ப்போம்.
பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு “பயங்கரவாதி”யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக – ஒரு சமுதாயத்திற்காக – இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.
இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே “பயங்கரவாதமாக” வெளிப்படுகிறது என்றார்.
எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் – வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த
உலகம் “பயங்கரவாதம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பது மட்டுமல்ல அச்சமூட்டக்கூடியதும்கூட…
இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துதான் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய – அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது.
அந்த பேசுபொருளை ஒரு தத்துவமாக – கோட்பாடாக இலகுவாக்கி போராடும் இனங்கள் முன் வைக்கிறது ‘ நந்திக்கடல்’.

“அதிகாரத்தின் வளர்ச்சி தர்க்க ரீதியாக தவிர்க்க முடியாத வகையில் அதிகாரத்தை அழிக்கும் உணர்வையும் வளர்த்தெடுக்கிறது.” என்கிறார், பிரெஞ்சு கோட்பாட்டாளரான ழான் போத்ரியா .
இதையே தன்க்கேயுரிய மொழியில் ‘நந்திக்கடல்’ இன அழிப்பு பின்புலத்தில் ஒரு நவீன கோட்பாடாக முன்வைக்கிறது.
இதன் சமகால உதாரணங்களாக கேப்பாபுலவு போராட்டம் தொடக்கம், அண்மையில் விக்கினேஸ்வரனுக்காக வீதிக்கு வந்த இளைய தலைமுறையினர் வரை இந்த உணர்வுத் திரட்டை நிறையவே அடுக்கலாம்.
இதையும் தாண்டி ‘நந்திக்கடலின்’ சிறப்பு என்னவென்றால், அது தமிழீழத்தையும் தாண்டி உலகளாவிய அதிகார அழிவை கட்டியம் கூறுவது மட்டுமல்லாமல் அதை ஒருங் கிணைக்கும் மைய அச்சாக தன்னை வெளிப்படுத்தியுள்ள பாங்குதான்.

மனித குல வரலாற்றில் இதுவரை உதித்த போராளிகள், புரட்சியாளர்கள், கோட்பாட்டாளர்கள், தத்துவவாதிகளுக்கு அவர்களது ஆளுமை சார்ந்து ஒரு தனித்துவ அடையாளம் இருந்தது.
அதனால் அவர்களை அடியொட்டிய – அவர்களின் இசங்களை கற்றுத் தேர்ந்த ஒரு தலைமுறையின் தொடர்ச்சி வரலாற்றில் அடையாளம் காணப்பட்டது.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பல முகங்கள் – பல பரிமாணங்கள். எல்லாவற்றினதும் கூட்டுருவமாக அவர் இருக்கிறார்.
அதை வாழும் காலத்தில் முழுமையாக உள்வாங்கி , கிரகித்து அதை வெளிப்படுத்தும் ஆற்றல் மனித அறிவுக்கும், மூளைக்கும் சாத்தியமேயில்லை.
எனவே பகுதியளவு பிரபாகரனியத்தை உட் செரித்த மனிதர்கள் இனி வரும் வரலாற்றில் அடையாளம் காணப்படலாம் – முழுமையான ‘பிரபாகரனிஸ்ட்’ க்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் அந்த தகுதிக்கு உரித்துடைய ஒன்றை எனக்குத் தெரியும்.
அதுதான் ‘நந்திக்கடல்’.

இதுவரை கால மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் – விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்.
ஏனைய தலைவர்களிடமிருந்து பிரபாகரன் வேறுபடும் முக்கிய பண்பு இது.
ஏனைய புரட்சியாளர்களின் போராட்ட வாழ்விலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொண்ட போதும் ஒரு கட்டத்தில் அவர்களது நிறைந்த பேச்சும் – உரையும் – எழுத்தும் அவர்களை அந்தப் பரப்புக்குள்ளேயே சுருக்கிக் கொண்டது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான நமது தேடலையும் – சிந்தனையையும் அதற்குள்ளேயே முடித்தும் கொண்டது.
இந்த இடத்தில்தான் பிரபாகரனின் ‘மவுனம்’ அதியுச்ச பரிமாணத்தை எட்டுகிறது.
இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை.
இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான்.
தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ‘ பிரபாகரனியத்தின்’ மைய சரடே இந்த மவுனம் தான்.
ஏனைய புரட்சியாளர்கள் தங்களை தாங்களே எழுதினார்கள். மக்களுக்கும் போதித்தார்கள். அதை சிந்தனையாளர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்து கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது.
அதை “நந்திக்கடல்’ தொடக்கி வைத்ததனூடாக அந்த வரலாற்று பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதை இதுதான்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் : வரலாற்றின் முதலும் கடைசியுமான நிகழ்வு.
வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற அதி மனிதர்களின் பாத்திரம் வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அதிசயம்.
உலகின் தலை சிறந்த பல போராளிகளுக்கு, புரட்சியாளர்களுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு ஏதோவொரு வகையில் ஒரு தொடர்ச்சி இருக்கும்.
அத்துடன் மேற்படி வடிவங்களில் ஏதோவொன்றை பிரதிநிதித்துவப் படுத்துபவர்க்ளாகவே வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இதன் ஒட்டுமொத்த கூட்டுருவமாக – குறியீடாக ஒரு சுயம்புவாக வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றை ஊடறுத்து தனித்து நிற்கிறார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற வரலாற்று பாதிரத்திற்கு எந்த முன்மாதிரியும் கிடையாது. இனியும் இருக்கப் போவதுமில்லை.
அது வரலாற்றின் ஒரு கால கட்டப் பாய்ச்சல்.
அது வரலாற்றில் ஒரு முறைதான் நிகழும் – அது நிகழ்ந்து விட்டது.
ஆனால் அவரது பாத்திரம் போராடும் இனங்களின் மைய விசையாக தன்னை வரலாற்றில் நிரந்தரமாக நிறுத்தி விட்டிருக்கிறது.
பிரபஞ்சத்தில் சூரியனைச் சுற்றி கோள்கள் அசைவது போல் இனி போராடும் தேசிய இனங்கள் இந்த மைய விசையை சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கும்.
அதுதான் குறியீட்டு ரீதியாக வேலுப்பிள்ளை பிரபாகரனை ‘சூரியத்தேவன்’ என்று தமிழ் மக்கள் தூர நோக்குடன் முன்பே விளித்திருந்தார்கள்.
எதிரிகள் சூழ நின்றாலும் ‘நந்திக்கடல்’ செருக்கும் பெருமிதமுமாக அந்த மண்ணில் ஓடிக் கொண்டிருப்பதன் காரணம் இதுதான்.
இது நந்திக்கடலின் கர்வம் அல்ல – இந்த இனத்தின் கர்வம்.
விரைவில் உலகளாவிய தேசிய இனங்களின் நிரந்தரக் கர்வமாக – அடங்காமையாக ‘பிரபாகரனியம்’ வரலாற்றில் பதிவாகும்.
வல்வெட்டித்துறை யில் பெருக்கெடுத்த விடுதலைப் பேராறு சுற்றிச் சுழன்றோடி நந்திக்கடலில் போய் மையம் கொண்டது.
அது இனி காபூல், பாக்தாத், டார்பர், அலெப்போ என்று உலகின் சந்து பொந்தெல்லாம் பாயும்.
ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்க்ளும், அவர்களின் கைப்பாவைகளும் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்தபடி முன்னோக்கிப் பாயும்.
அதை வரலாறு “பிரபாகரனியம்’ என்று பதிவு செய்து கொள்ளும்.

பரணி கிருஸ்ணரஜனி

About இலக்கியன்

மறுமொழி இடவும்