மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017.

பாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாதவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் தியாக தீப கலைமாலை நிகழ்வும் 30-09-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00மணி முதல் 8.00 மணி வரையும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் 26-09-2001 அன்று சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அவர்களையும், 25-08-2002 அன்று சுகயீனம் காரணைமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு அவர்களையும் நினைவு கூரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ரகு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை திரு மகேந்திரன் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் லெப்கேணல் திலீபன்அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி கமலராணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அடுத்து கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு வசந்தன் அவர்கள் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அடுத்து கேணல் ராயு அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான திரு ரமேஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் வரிசையாகச் சென்று மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

தொடர்ந்து தாயக விடுதலைப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், போரின்போது உயிர்நீத்த பொதுமக்களையும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்கநிகழ்வில் முதலாவதாக வணக்க நடனம் இடம்பெற்றது. தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவுசுமந்த பாடலுக்கான வணக்க நடனத்தை நடனாலயாப்பள்ளி மாணவி செல்வி சக்தி கண்ணன் அவர்கள் நிகழ்த்தினார். வணக்க நடனத்தை அடுத்து தியாகதீபம் லெப் கேணல்திலீபன் அவர்களின் நினைவுகளைச் சுமந்த நினைவுக் கவிதைகளை திரு தயாநிதி, செல்வன் துவாரகன் மற்றும் செல்வன் கே.ஜி ஆகியோர்கள் வாசித்தார்கள்.

அடுத்ததாக நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையினை திரு கொற்றவன் அவர்கள்நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் நினைவுபடுத்தி தியாகதீபம் திலீபன் ஈகைச்சாவடைந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் இன்றும் அவை நிறைவேற்றப் படாமலேயே உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கேணல் சங்கர் அவர்கள் பற்றிய நினைவுப்பகிர்வில் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவு உருவாக்கத்திலும் கடற்புறா அணியில் அவரது காத்திரமான வகிபாகத்தையும் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தேசியத் தலைவருக்கு பலவழிகளிலும் பக்கத்துணையாகச் செயற்பட்டவர் கேணல் சங்கர் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கேணல் ராயு அவர்கள் விடுதலைப்புலிகளின் சிறுத்தை அணிகள் பொறியியல்த்துறை மற்றும் கிட்டு பீரங்கிப்படையணி ஆகியவற்றின் உருவாக்கங்களிலும் அவைகளின் வளர்ச்சியிலும் அவரது பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்டதோடு கேணல்ராயு அவர்களின் துணைவியார் லெப் கேணல் கெங்கா (ஆர்கலி) அவர்களையும் நினைவுகூர்ந்து அவர்கள் இருவரும் கூடிய காலங்களை சமர்க்களங்களிலும் இயக்க நடவடிக்கைகளிலுமே கழித்தார்கள் என்று குறிப்பிட்டதோடு கேணல் ராயு அவர்கள் சாவடைந்த பின்னரும் அவரது துணைவியார் கெங்கா கடற்புலிகளின் மகளீர்அணியின் நிர்வாகப்பொறுப்பாளராகவும் பின்னர் படகுக்கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டு 2009-ம்ஆண்டு மேமாதம் முதல் வாரத்தில் முக்கியமான கடல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் லெப் கேணல் கெங்காவாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் என குறிப்பிட்டதோடு தமிழீழ விடுதலைப் போராட்டவரலாற்றில் கணவன் மனைவியான கேணல் ராயு அவர்களும் லெப் கேணல் கெங்கா அவர்களும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன்அவர்களின் நினைவான காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய பதிவுகளையும் அண்மையில் தாயகத்தில் நிகழ்ந்த சில முக்கிய அரசியல்ப்பதிவுகளையும் உள்ளடக்கியதான சம காலத்திற்கேற்ற வகையில் தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது.

அதையடுத்து கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது. மெல்பேர்ண் இளைய இசையமைப்பாளர்களின் பின்னணி இசையில் மெல்பேர்ணில் வளர்ந்துவரும் பாடகர்கள் தியாகதீபம் திலீபன் நினைவு சுமந்த பாடல்கள் உட்பட இன்னும் பல தாயகப் பாடல்களையும் மிகவும் உணர்வுபூர்வமாகப் பாடினார்கள். இந்த தாயகப்பாடல்கள் அனைத்தும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரது மனங்களையும் நிறைத்திருந்தது. கலைமாலை நிகழ்வையடுத்து கலைஞர்களுக்கும் பாடகர்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இதனை மெல்போணின் மூத்த கலைஞரும் மில்ப்பார்க் தமிழ்ப்பள்ளியின் அதிபருமான திரு சந்திரகுமார் அவர்கள் கலைஞர்களுக்கும், பாடகர்களுக்குமான சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.

இறுதியாக இரவு 8.00மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் தியாகதீபம் கலைமாலை 2017 நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்கள் பள்ளிமாணவர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்