சமூகமேம்பாட்டுப்பேரவையால் கொக்குத்தொடுவாயில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்நாள் நிகழ்வு.

சமூக மேம்பாட்டுப்பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்நாள் நிகழ்வானது கடந்த 2017.10.01 அன்று பிற்பகல் 3:00மணியளவில் கொக்குத்தொடுவாய் அ.த.க.பாடசாலை மண்டகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முன்பள்ளிகளான, கல்யாணவேலவர்(முள்ளியவளை), காட்டாவிநாயகர்(முள்ளியவளை), சுபாநந்தி(மாமூலை), சத்தியன்(ஆறுமுகத்தான் குளம்), குமுழமுனை மத்தி, முரளி(குமுழமுனை), கற்பகவிநாயகர்(கருநாட்டுக்கேணி), பால்நிலவு(கொக்கிளாய்),மலரும்மொட்டு(கொக்குத்தொடுவாய்) ஆகிய ஒன்பது முன்பள்ளிகள் இந்த சிறுவர்நாள் நிகழ்வில் பங்குகொண்டன.

இந் நிகழ்வின் முதல் நிகழ்வாக, விருந்தினர் வரவேற்பு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து, மங்கலவிளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றது. மங்கல விளக்கினை மதிப்புறு து.ரவிகரன் அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் நிகழ்வுகளும் விருந்தினர் உரையும் இடம்பெற்றது.

அந்த வகையில் அங்கு கருத்து தெரிவித்த ரவிகரன் அவர்கள்,

இன்றைய சிறுவர்களே நாளைய இந்த பூமிப்பந்தை கட்டி ஆளப்போகும் நாளைய எமது தலைவர்கள் ஆவர். அவர்களை நாம் சிறு வயதில் இருந்தே நல்ல ஒழுக்கசீலர்களாக, நல்ல அடித்தளங்களை இட்டு வளர்த்து ஆளாக்கவேண்டும். உண்மையில் பெரிய மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விட இந்த சிறார்களுக்கு கல்வி கற்பிப்பதே மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். ஆனால் இந்த சிறார்களுக்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சீரான ஊதியம் கிடைப்பதில்லை. இது தொடர்பாக மாகாணசபை கரிசனையுடன் செயற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

மேலும் ரவிகரன் அவர்கள் விருந்தினராக கலந்துகொண்ட இந் நிகழ்வில், சமூக மேம்பாட்டுப் பேரவையின் தலைவரும் இயக்குனருமான கனிற்றன்சாம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நகுலேசுவரன் சத்தியசீலன் மற்றும் சின்னராசா லோகேசுவரன் ஆகியோரொடு, முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில், விருந்தினர்களால் சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்