டிடிவி தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு ஏன்?

அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாகக் கூறி அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி காவல்நிலைய அதிகாரிகள் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அதிமுக அம்மா அணி சார்பில் வெளியிட்டுள்ள துண்டறிக்கை ஒன்றில், ”கொலையாளிகளின் ஆட்சி தொடரலாமா?” என்றும் ”உன் பதவியில் நீ செய்த தப்புகளுக்காக டெல்லிக்கு நீ அடிமையாகலாம், அதற்காக மாணவர்களை வஞ்சிக்கலாமா?” போன்ற பல கேள்விகளை அடுக்கி, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த துண்டறிக்கையை விநியோகம் செய்ததற்காக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது முதல் தகவலறிக்கையை காவல்துறை பதிவு செய்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக தினகரன் குழுவினர் வெளியிட்ட துண்டறிக்கையில் பொய்யான தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசை விமர்சித்து மக்களை அரசுக்கு எதிராக தூண்டும் நோக்கத்தில் உள்ளதாக புகார் அளித்த வழக்கறிஞர் சரவணன் கூறியதாக தெரியவந்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அரசை குறைசொல்வதற்கு அனைவருக்கும் தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளது என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

”துண்டறிக்கை கொடுத்ததற்கு எங்கள் அணியினர் மீது வழக்கு போட்டுள்ளார்கள். தினகரன் ஆதரவு எம்எல்ஏகளான எங்களை தகுதிநீக்கம் செய்தது போலவே, தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தேவையற்றது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, தினகரன் சென்னையில் உள்ளார், சேலத்தில் கொடுக்கப்பட்ட துண்டறிக்கைக்கு இவர் மீது வழக்கு போடுவது வரம்பு மீறிய செயல்,” என தங்கத்தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்