தமிழரசுக் கட்சியின் செயலர் தமிழருக்கு துரோகம் செய்கிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் அண்மைக்காலமாக ஆற்றுகின்ற உரைகள், விடுக்கின்ற அறிக்கைகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக இருப்பதைக் காணமுடிகின்றது.

அதிலும் குறிப்பாக இடைக்கால வரைபு தொடர்பில் அவர் விடும் அறிக்கைகள் ஒரு திட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அவர் செயற்படுகின்றாரோ என்று எண்ணுமளவுக்கு நிலைமையுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மிகவும் நிதானமாக இருக்கும் போது, அந்தக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் இடைக்கால வரைபை கடுமையாக ஆதரிப்பதுடன் அதில் எல்லாம் இருப்பதாகவும் கூறுகிறார்.

அவரின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்தில் நடந்த பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இடைக்கால வரைபில் சமஷ்டி உள்ளது. சமஷ்டி இருக்கின்ற போதிலும் அதில் சமஷ்டி இல்லை என்றுதான் சிங்களத் தலைவர்கள் கூறுவார்கள்.

அவ்வாறு கூறுவதன் மூலம்தான் சிங்கள மக்கள் குறித்த இடைக்கால வரைபுக்கு ஆதரவு வழங்குவர் என்பதாகக் கருத்துரைத்துள்ளார்.

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுதிட்டமாகக் கூறியுள்ளார்.

தவிர, இடைக்கால வரைபு என்பது இன்னமும் வெளிவராத ஒன்றல்ல. அது வெளியாகி விட்டது. அதில் இருக்கின்ற விடயங்களை எவரும் வாசித்து அறிய முடியும்.

அவ்வாறு அதனை வாசித்து உய்த்தறிந்து கொண்டால், அதில் சமஷ்டி என்பதற்குரிய எந்த அம்சமும் இல்லை என்பது தெரியவரும்.

கூடவே வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கும் பொலிஸ் அதிகாரத்துக்கும் இடமில்லை.
நிலைமை இவ்வாறாக இருப்பதால் தமிழ் புத்திஜீவிகளும் குறித்த இடைக்கால வரைபு எமக்கான தீர்வாகாது என நிறுதிட்டமாகக் கூறியுள்ளனர்.

நிலைமை இதுவாக இருக்கையில், சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களுக்கு மறைப்புச் செய்து தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வைத் தரவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கூறுவது எதற்காக என்பது தான் புரியவில்லை.

எங்களுக்கான தீர்வை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தந்தாக வேண்டும். இதில் சிங்கள மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.

சிங்கள மக்களை ஏமாற்றி எங்களுக்குத் தீர்வு தரப்படுமாக இருந்தால் அது நிலை பெறுமா? என்ற கேள்விகள் எழுவதும் நியாய மானதே.

இது ஒருபுறம் இருக்க, இடைக்கால வரைபில் சமஷ்டி இருக்கிறது. எனினும் அதில் சமஷ்டி இல்லை என்றுதான் சிங்களத் தலைவர்கள் சொல்லுவார்கள். அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் கூறும்போது இந்த செய்தி சிங்கள மக்களைச் சென்றடையாதா?

உண்மையில் இடைக்கால வரைபில் சமஷ்டி இருக்கிறது நன்மை கருதி அதனை ஆட்சியாளர்கள் மறைக்கின்றனர் என்றால், அதனை நீங்கள் மேடை போட்டுப் பேசலாமா?

ஆக, தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான உரைகளை துரைராஜசிங்கம் ஆற்றுகிறார் என்பது தெளிவாகிறது.

எனவே இத்தகைய அநீதிச் செயல்களை விடுத்து உள்ளதை உள்ளபடி உண்மையாகப் பேசுங்கள். அதுவே நல்லது.

நன்றி வலம்புரி

About இலக்கியன்

மறுமொழி இடவும்