மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன நரி அரசியலே இன்று நடைபெறுகின்றது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன நரி அரசியலே இன்று நடைபெறுவதாகவும், அந்த நரி அரசியல் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் எனவும், அது தமிழ்த் தேசியத்தையே உடைக்கும் எனவும் அன்று மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், சட்டம் தெரிந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அந்த நரி அரசியலை ஏற்கவேண்டுமென பிரச்சாரம் செய்து வருவது மிகவும் வேதனையானது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் கூறிய நரி, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்ததால், பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலில் தமிழரசுக் கட்சி ஈடுபடுவதாகவும் அவ்வூடகம் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த நரி அரசியல் 2002ஆம் ஆண்டு நேர்வேயின் சமாதான பணி என்ற பெயரில் ஆரம்பித்தது. அந்த சமாதான முயற்சியின் பின்னணி இறுதியில் எங்கே போய் முடியுமென அந்த நரி அரசியலுக்குத் தெரியும். ஆனாலும் உலக அரசியல் ஒழுங்கு முறைகளுக்கு அடங்கிப் போக வேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டதால், அன்று புலிகளும் அந்த நரி அரசியலின் நோக்கம் தெரிந்தும், சமாதானம் என்ற பேச்சுக்கு சம்மதித்தனர்.

விடுதலை இயக்கம் ஒன்று எவ்வாளவுதான் சமாதான முயற்சியில் இறங்கினாலும் பயங்கரவாத சாயம் பூசப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அந்தப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு என்று தெரிந்தாலும் சர்வதேச நாடுகளும் அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில்தான் புவிசார் அரசியலை மேற்கொள்ளும் என்பது வெளிப்படையானது.

ஆனாலும் புலிகளினுடைய அணுகுமுறையினால் அந்த நரி அரசியல் அன்று புலிகளை வெற்றி கொள்ள முடியவில்லை. எனினும் 2005இல் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், அந்த நரி அரசியல் அணுகுமுறையை ஒதுக்கி விட்டு அதன் தொடர்ச்சியாக நேரடியான மூர்க்கத்தனமான அரசியலை கையான்டது.

சர்வதேச நாடுகளும் அரசுக்கு அரசு என்ற அணுகுமுறை அடிப்படையில் அதற்கு உதவியளித்தன. ஆனால் தங்களை மிதவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் இன்றையை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அன்று மௌனமாக இருந்தனர்.

கேட்டதற்கு, புலிகள் எங்களை அரசியல் செய்ய விடவில்லை என்று கூறினார்கள். ஆனால் இன்று நல்லாட்சி என்ற பெயரிலான அந்த நரி அரசியலுக்குள் விழுந்து, 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை பின்தள்ளிவிட்டு, தமிழர்களின் சுயமரியாதைக்கு ஆப்பு வைக்கும் இடைக்கால அறிக்கையை தலையில் தூக்கிவைத்து பிரச்சாரம் செய்கின்றனர் என அவ்வூடகம் குற்றம் சாட்டியுள்ளது.

கற்றலோனியா, குர்திஸ்தான் வழியில் மக்கள் அந்த நரி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்