நான் பேச அழைத்தும் வரவில்லையென்கிறார் மைத்திரி!

நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்னையை கேட்டேன். அவர்கள் தமது கோரிக்கையை என்னிடம் கூறினார்கள். அதன் போது நான் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயாராக இல்லை. தமது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள் என என்னிடம் கோருகின்றார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் , பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாதென விளக்கமளித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

யாழ்.இந்துக்கல்லூரி நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் யாரை பேச அழைக்கின்றார் என்பதே புரியவில்லை.அரசுடன் இணைந்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,சுமந்திரன் போன்றவர்களுடன் பேசுவது போல இங்கும் பேச அழைக்கின்றாராவென கேள்வி எழுப்பினார் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுள் ஒருவரான சிவரூபன் தங்கவேல்.இவர் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க உபசெயலாளர்களுள் ஒருவராவார்.நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பதாக நடந்த போராட்டத்தினில் காவல்துறை அதிகாரியொருவரால் சப்பாத்து காலால் தாக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே இன்றைய போராட்டத்தின் போது அரசியல் கைதிகளது குடும்பங்கள் மைத்திரியினை சந்திக்காதிருக்க சதி திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஜ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதற்கென நேற்று ஆளுநர் அலுவலகத்தினில் நடந்த சந்திப்பினில் உறுதி மொழி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று போராட்டம் நடந்த போது காவல்துறை அதிகாரியொருவர் பேச்சினிலீடுபட அரசியல் தலைவர்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளது குடும்பத்தவர்கள் தன்முன் கண்ணீருடன் அழுதால் அது சர்வதேச மட்டத்தினில் பேசுபொருளாகியிருக்குமென மைத்திரி ஆலோசகர்கள் தெரிவித்ததையடுத்தே குடும்பங்கள் சந்திக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்